/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு கட்டமைப்பில் பின்தங்கும் அரசுப்பள்ளிகள்!
/
விளையாட்டு கட்டமைப்பில் பின்தங்கும் அரசுப்பள்ளிகள்!
விளையாட்டு கட்டமைப்பில் பின்தங்கும் அரசுப்பள்ளிகள்!
விளையாட்டு கட்டமைப்பில் பின்தங்கும் அரசுப்பள்ளிகள்!
ADDED : அக் 07, 2025 11:48 PM
திருப்பூர்; திருப்பூரில், நுாற்றுக்கணக்கில் அரசுப்பள்ளிகள் இருந்தும், விளையாட்டு கட்டமைப்பு இல்லாததால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்குரிய கட்டமைப்பு இல்லை.
பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தனிநபர், குழு விளையாட்டுகள் நடந்து வருகிறது. குறுமைய, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, திறமையான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், நீச்சல், டேக்வோண்டோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன; இப்போட்டிகள் அனைத்தும், தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டரங்கில் நடத்தப்படுகின்றன. கேரம் மற்றும் சைக்கிளிங் போட்டிகள் மட்டும், நஞ்சப்பா பள்ளி மற்றும் சிக்கண்ணா கல்லுாரியில் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான மாணவ, மாணவியர் விளையாட்டு திறமையுள்ளவர்களாக உள்ளனர். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கூட வெற்றி பெறுகின்றனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அனைத்து வகையான விளையாட்டுப் பயிற்சிக்குரிய கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால், நுாற்றுக்கணக்கான அரசுப்பள்ளிகள் இருந்தும், பல பள்ளிகளில், பெரியளவிலான மைதானங்கள் இருந்தும் கூட, போட்டிகள் நடத்துவதற்குரிய மற்றும் பயிற்சி பெறுவதற்குரிய கட்டமைப்பு இல்லை.
இதனால், திறமையுள்ள மாணவர்களால், உரிய பயிற்சியை பெற, தனியார் பயிற்சிக் கூடங்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. பொருளாதார வசதியும், வாய்ப்பும் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு விளையாட்டு திறமையும், பயிற்சி பெறுவதற்கு ஆர்வமுள்ள போதிலும், அதற்கான சூழல் அமையாமல் போய் விடுகிறது. விளையாட்டுத் திறமையுள்ள மாணவ, மாணவியருக்கு தொ டர் பயிற்சி அவசியம் என்ற சூழலில், அதற்கான பயிற்சி கட்டமைப்பு அவசியம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் பயின்று வரும் நிலையில், விளையாட்டு கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்வர் உதயநிதி, இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, விளையாட்டு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோரின் எதிர்பார்ப்பு.