ADDED : அக் 12, 2025 10:50 PM

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள, 72 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சிகளில் அக்.,2ம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில், ஊராட்சியில் பிரதானமாக உள்ள மூன்று அத்தியாவசிய பணிகளை தேர்வு செய்தல், ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்து வரவு- செலவு அறிக்கை, வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குரல்குட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மா.கம்யூ.,சார்பில், எலையமுத்துார் ரோடு முதல், வாய்க்கால்பாலம் வரை உள்ள 300 மீட்டர் ரோட்டை புதுப்பிக்க வேண்டும், என மனு அளிக்கப்பட்டது.
குறிச்சிக்கோட்டையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ.,சார்பில், டாஸ்மாக் மதுக்கடையில், அதிகாலை, 5:00 மணி முதல் சில்லிங் முறையில் மது விற்கப்படுகிறது. மதுக்கடையை அகற்ற வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கவும், சிதிலமடைந்துள்ள துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். ரோடு, தெரு விளக்கு பராமரிக்கவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 695 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 2,427 ஆண்கள், 2,888 பெண்கள் என மொத்தம் 5,315 நபர்கள் பங்கேற்றனர்.
சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் நாராயணசாமி, பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், மக்கள் தரப்பில் சொலவம்பாளையம் ரோடு குறித்து மனு அளிக்கப்பட்டது.
மனுவில், 'வி.ஏ.ஓ., அலுவலகம் ரோடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் தினந்தோறும், நான்கு முதல் ஐந்து முறை தண்ணீர் லாரிகள் செல்வதால் ரோடு சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த லாரிகளை தேசிய நெடுஞ்சாலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் வாரிய அலுவலகம் செல்லும் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.