/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராவல் மண் கடத்தல் லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
கிராவல் மண் கடத்தல் லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கிராவல் மண் கடத்தல் லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கிராவல் மண் கடத்தல் லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : செப் 03, 2025 11:01 PM

உடுமலை; உடுமலை அருகே, கிராவல் மண் கடத்தல் லாரி, பி.ஏ.பி., கால்வாயில் விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், வன எல்லை கிராமங்களான, ஜல்லிபட்டி, சின்னக்குமாரபாளையம், மானுப்பட்டி பகுதிகளிலுள்ள சீதாமடை குட்டை, கருப்புச்சாமி குட்டை, கருப்பராயன் கோவில் குட்டை மற்றும் ஓடை பகுதிகளில், எந்த விதமான அனுமதியும் இல்லாமல் , சட்ட விரோதமாக கனிம வளக்கொள்ளை நடந்து வருகிறது.
பல அடி ஆழத்திற்கு, கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. கனிம வளத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் போலீசார் கண்டு கொள்ளாத நிலையில், பிரதான ரோடுகளிலேயே, தினமும் பல லாரிகளில் கிராவல் மண் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.
நேற்று உடுமலை பள்ளபாளையம் பகுதியில் ரோடு மறியல் காரணமாக, அருகிலுள்ள பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வழியாக கிராவல் மண் கடத்தல் லாரி சென்றுள்ளது. அதிக எடை காரணமாக, கால்வாய் கரை உடைந்து, லாரி கால்வாய் நீருக்குள் கவிழ்ந்தது.
உடனடியாக லாரியிலிருந்த மண் கால்வாய் நீரில் கலந்தது; லாரி நீரில் அடித்துச்செல்லாமல் இருக்க, அருகிலுள்ள தென்னை மரத்தில் லாரி கயிறு போட்டு கட்டப்பட்டது.
பின்னர், பொக்லைன் வாகனம் கொண்டு வந்து, கால்வாயில் விழுந்த லாரி மீட்கப்பட்டது. இதில், கால்வாய் கரை பாதித்ததோடு, பாசன நீரில் கிராவல் மண் கலந்து பாதிப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய கிராமங்களில், வன எல்லை பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தல் நடந்து வருகிறது. கனிம வளக்கொள்ளை குறித்து, அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்ளாததால், பகல் நேரங்களிலேயே கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. தற்போது, கிராவல் மண் கடத்தல் லாரி கால்வாயில் கவிழ்ந்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. உரிய ஆய்வு செய்து, கனிம வளக்கொள்ளையை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். இந்த விபத்தில் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்' என்றனர்.