/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு கடுகிற்குள் பெரும் கடல் திருக்குறள்! ஆன்மிக பேச்சாளர் பேச்சு
/
சிறு கடுகிற்குள் பெரும் கடல் திருக்குறள்! ஆன்மிக பேச்சாளர் பேச்சு
சிறு கடுகிற்குள் பெரும் கடல் திருக்குறள்! ஆன்மிக பேச்சாளர் பேச்சு
சிறு கடுகிற்குள் பெரும் கடல் திருக்குறள்! ஆன்மிக பேச்சாளர் பேச்சு
ADDED : பிப் 10, 2025 10:40 PM

உடுமலை; 'திருவள்ளுவர் கூறிய அறநெறியோடு வாழ்ந்தால், நமக்கு நிம்மதி உண்டாகும்,' என உடுமலையில், குழந்தைகளுக்கான திருக்குறள் வகுப்பை துவக்கி வைத்து ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பேசினார்.
உடுமலை தியாகேசர் மண்டபத்தில், குழந்தைகளுக்கான இலவச திருக்குறள் வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவில், டாக்டர் மேகலா வரவேற்றார்.
வகுப்பை துவக்கி வைத்து, ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது: திருக்குறள் தமிழ் சந்தததிக்கு கிடைத்த பெரும் சொத்தாகும். அறத்தின் வழி நடக்க வழிகாட்டியாக, திருக்குறள் அமைந்துள்ளது.
முப்பாலாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாலிலும் இயல் பிரிவு உண்டாக்கி, இயல் பிரிவுக்குள் அதிகாரம் வைத்து, அதிகாரத்திற்குள் குறள் அமைத்து, சிறு கடுகிற்குள் பெரும் கடலை அடக்கியது போல, ஆழ்ந்த நுண்ணிய அர்த்தங்களுடன் ஒரு ஆசிரியர்- மாணவனுக்கு போதிப்பது போல, திருக்குறளை திருவள்ளுவர் நமக்கு கற்பிக்கிறார்.
திருக்குறள் ஒரு பாடம் அல்ல, நம் வாழ்க்கையாகும். திருவள்ளுவர் கூறிய அறநெறியோடு வாழ்ந்தால், நமக்கு நிம்மதி உண்டாகும். பொருள் ஈட்டுதலும், கல்வி தேடுதலும் நமக்கு நிம்மதியை தந்து விடாது.
அறம் தான் நமக்கு நிம்மதியை தர முடியும். முதலில் நாம் திருக்குறளை பயிலுவோம்; கற்றலின்படி வாழ்வோம்; பிறருக்கு கற்பிப்போம்; குழந்தைகளுக்கு அமுது ஊட்டுவது போல திருக்குறளை மனனம் செய்வித்து, உட்பொருளில் மீது ஆர்வத்தை துாண்டி, திருவள்ளுவ நெறியில் வாழ்விப்போம்.
அதுவே அவர்களுக்கு நாம் சேர்த்து வைக்கும் பெரும் சொத்தாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தியாகேசர் மண்டபத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், குழந்தைகளுக்கு, திருக்குறள் வகுப்பு நடைபெற உள்ளது.

