ADDED : அக் 30, 2024 08:55 PM

திருப்பூர், ;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் ஒன்பதாவது ஆண்டாக தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று பசுமைத்தீபாவளி கொண்டாடினர்.
'வெற்றி' அமைப்பினர், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பெயரில், கடந்த 2015ல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், பசுமை வளர்ப்பு கனவை நிறைவேற்றும் நோக்கில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டன. வேறு பசுமை அமைப்புகளும் கரம் கோர்த்தன. அந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள், ஒரு லட்சம் என்ற இலக்கு எட்டப்பட்டது. அதையொட்டி, அனைத்து நிர்வாகிகளும் இணைந்து, ஆண்டுதோறும் தீபாவளிக்கு முந்தைய நாள் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு எனும் லட்சியத்தை அடைந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கை மிஞ்சியே, மரக்கன்றுகள் நட்டு, வரலாற்று சாதனை படைக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில், உலகமே சுருண்ட போதும், மரக்கன்று நடும் பணி மட்டும் சமூக இடைவெளியுடன் தடையின்றி நடந்தது.
இந்தாண்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர், தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பத்தாம் ஆண்டு திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நேற்றைய நிலவரப்படி, 2.25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. மங்கலம் ரோடு, ஆண்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், குப்புராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், அத்தி -750, பெருநெல்லி -250 என, 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், நில உரிமையாளர் குப்புராஜ், அவரது மனைவி கவிதா, மகன் ரகுசுதன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டனர்.
----
திருப்பூர், ஆண்டிபாளையத்தில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.