/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மேற்கு ரோட்டரியின் பசுமை சேவை
/
திருப்பூர் மேற்கு ரோட்டரியின் பசுமை சேவை
ADDED : டிச 31, 2025 06:47 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தின் ஆண்டு விழா, மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில், வரும் 3ம் தேதி நடக்கிறது.
'வெற்றி' அறக்கட்டளை சார்பில், பல்வேறு பசுமை அமைப்புகளுடன் இணைந்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த, 2015ல் துவங்கிய இத்திட்டத்தில், 11வது திட்டத்துடன் சேர்த்து, 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன. அதாவது, 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அவ்வகையில், 11வது திட்டத்தில், மூன்று லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன், 11வது திட்ட நிறைவு விழா, மங்கலத்தில், மாதேசிலிங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி, 3ம் தேதி நடக்க உள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கிய போது, திருப்பூர் மேற்கு ரோட்டரி யுடன் இணைந்து, மங்கலம் அக்ரஹாரப்புத்துாரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் நிலத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது.
இன்று, வானுயர்ந்த மரங்களாக வளர்ந்து, குறுங்காடு போல் காட்சி யளிக்கிறது. மேலும், மேற்கு ரோட்டரி மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியால், நடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தினமும் 'வாக்கிங்' சென்று ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர். மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கும் சேவைப்பணியும், திருப்பூர் மேற்கு ரோட்டரியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
விழாவில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், துணை கமிஷனர் ஹர்சினி, உதவி கமிஷனர் தமிழ்வாணன் ஆகி யோர் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் கு.சிவராமன், கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் (ஓய்வு) புண்ணியமூர்த்தி பங்கேற்று, மரக்கன்று நடும் பணியை துவக்கி வைக்கின்றனர்.
'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறுகையில், ''வனத்துக்குள் திருப்பூர்-1' திட்டத்தில் நட்ட மரங்கள், குறுங்காடு போல் வளர்ந்து,பசுமையாக காட்சியளிக்கின்றன.
அதேபோல், மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்திலும், திருப்பூர் மேற்கு ரோட்டரியுடன் இணைந்து, மரக்கன்று நட்டு வளர்க்கப்படும்; 11வது திட்டத்தின் ஆண்டு விழா, 3ம் தேதி நடக்கிறது,'' என்றார்.

