ADDED : ஜூலை 27, 2025 11:47 PM

திருப்பூர்; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு, அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
கலாம் மறைவின் போது, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் நோக்கத்துடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவக்கப்பட்டது. 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது; நடப்பு ஆண்டில், 11வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது.
கலாம் மறைவுக்கு பசுமை அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று, வெள்ளகோவில் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளகோவில் விருட்சம் அறக்கட்டளை மற்றும் விருட்சம் நர்சரி துவக்க விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. வட்டமலை அணைக்கப்பட்டு பகுதிகளில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், வெள்ள கோவில் நிழல்கள் அமைப்புடன் இணைந்து, 3000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டமும் துவங்கியுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.