/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் - 2 தேர்வு: 7,561 பேர் எழுதினர்
/
குரூப் - 2 தேர்வு: 7,561 பேர் எழுதினர்
ADDED : செப் 29, 2025 12:16 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் 37 மையங்களில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வை, 7 ஆயிரத்து 561 பேர் எழுதினர்; 2 ஆயிரத்து 762 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழகம் முழுவதும், டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 மற்றும், 2 ஏ தேர்வுகள் நேற்று நடைபெற்றன. தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை - 2 பணியிடங்களுக்கான குரூப் - 2; முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்களுக்காக, குரூப்- 2 ஏ தேர்வுகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டத்தில், குரூப் 2 தேர்வுக்காக, மொத்தம் 10 ஆயிரத்து 323 பேர் விண்ணப்பித்து, ஹால்டிக்கெட் பெற்றிருந்தனர். நேற்று, திருப்பூர் வடக்கு தாலுகாவில் 13; திருப்பூர் தெற்கில் 14; தாராபுரத்தில் 10 என, 37 மையங்களில் குரூப் தேர்வுகள் நடைபெற்றன.
திருப்பூரில், குமரன் கல்லுாரி, எல்.ஆர்.ஜி. கல்லுாரி, நஞ்சப்பா, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை, 9:30 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம், 12:30 மணிக்கு முடிவடைந்தது. மொத்த தேர்வர்களில், 73.24 சதவீதம் பேர், அதாவது 7 ஆயிரத்து 561 பேர் தேர்வு எழுதினர்; 2 ஆயிரத்து 762 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மூன்று பறக்கும்படை குழுவினரும், துணை தாசில்தார்கள் தலைமையிலான 12 மொபைல் குழுவினர் ரோந்து சென்று, தேர்வு மையங்களில் சோதனை நடத்தினர். எல்.ஆர்.ஜி. கல்லுாரி மையத்தில் நடைபெற்ற தேர்வுகளை, கலெக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு, ஆய்வு நடத்தினார்.