/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதி பல்லாங்குழி ரிங் ரோடு அதோகதி
/
பாதி பல்லாங்குழி ரிங் ரோடு அதோகதி
ADDED : அக் 23, 2025 12:38 AM

திருப்பூர்: பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்படாததால், நல்லுார் ரிங் ரோட்டில் பாதியளவு பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன.
திருப்பூரில், வாகன நெருக்கடியை குறைக்கும் வகையில், புறநகர் ரோடுகளை இணைக்கும் வகையில், ரிங் ரோடு அமைக்கப்பட்டது. கடந்த, 2003ம் ஆண்டு முதல், இந்த ரோடு பயன்பாட்டில் இருக்கிறது. இரண்டு முறை அகலப் படுத்தியதால், போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரோட்டையும், காங்கயம் ரோட்டையும் இணைக்கும் ரிங் ரோடு காசிபாளையம் வழியாக நல்லுார் வரை வருகிறது. அதன்பின், முதலிபாளையம் பிரிவில் இருந்து கோவில்வழி செல்கிறது.
அங்கிருந்து வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம், அணைப்பாளையம், வேலம்பாளையம், அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி, பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக, ஊத்துக்குளி ரோட்டை சென்றடைகிறது. முக்கிய ரோடுகளை இணைப்பதால், நகருக்குள் செல்வதை தவிர்த்து, வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
நல்லுார் ரிங் ரோட்டில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி கடந்தாண்டு நடந்தது. குழாய் பதிப்பு பணி முடிந்து, ரோடு சீரமைக்கப்படவில்லை. மண்ணால் மூடப்பட்ட பகுதிகள், குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
ரோட்டின் மையத்தில், குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இலகு மற்றும் கனரக வாகனங்களும், 'டூவீலர்'களும், ரோட்டின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ரோட்டின் பாதி இடம் மண்மேடாக மாறியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'குழாய் பதிக்கும் பணி முடிந்து பல மாதங்களாகியும், 'பேட்ஜ் ஒர்க்' கூட செய்யவில்லை. மண் ணால் மட்டும் மூடிய பகுதியில், பல இடங்கள் குழியாக மாறியுள்ளன. மழைநீர் தேங்கியுள்ளதால், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தாழ்வாக உள்ள வளைவு பகுதியில், ரோட்டின் பாதிவரை, மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. ஆகமொத்தம், இரவு நேரத்தில் இந்த ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. மாநகராட்சி நிர்வாகம், இந்த ரோட்டை விரைந்து சீரமைக் க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.