/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தயார் நிலையில் மாவட்டம் முழுக்க... நிவாரண முகாம்கள்! வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு
/
தயார் நிலையில் மாவட்டம் முழுக்க... நிவாரண முகாம்கள்! வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு
தயார் நிலையில் மாவட்டம் முழுக்க... நிவாரண முகாம்கள்! வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு
தயார் நிலையில் மாவட்டம் முழுக்க... நிவாரண முகாம்கள்! வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு
ADDED : அக் 23, 2025 12:37 AM

திருப்பூர்: மாவட்டத்தில் வெள்ள அபாயமுள்ள 41 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன; மாவட்டம் முழுக்க 52 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவக்கத்தில் இருந்தே 'கருணை' காட்டி வருகிறது. மானாவாரி சாகுபடியை துவக்கிய விவசாயிகள், பருவமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, இரவு மற்றும் பகல் நேரங்களில், சில மணி நேரங்கள் மழை பெய்தது. நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை, 8:00 மணி வரை, மாவட்ட அளவில், 24 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, உடுமலையில், 85 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தாராபுரம் - 33, மடத்துக்குளம் - 32, மூலனுார் - 28, வெள்ளகோவில் - 31 மி.மீ., என்ற அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மேலும், திருப்பூர் தெற்கு - 16, பல்லடம் - 10, திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில், தலா, 7, மி.மீ., - அவிநாசியில், 3 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.
5வது நாளாக விடுமுறை நேற்று முன்தினம் மாலை துவங்கிய மழை, இரவும் தொடர்ச்சியாக பெய்தது; நேற்று அதிகாலையும் மழை பெய்து கொண்டிருந்தது. குறிப்பாக, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக, மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது. காலை, 8:03 மணிக்குத்தான், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிப்பு வெளியானது. தீபாவளி பண்டிகைக்காக, 21ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடந்த, 18ம் தேதி முதல் துவங்கிய விடுமுறை, 5வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
அணைகள் நிலவரம் உடுமலை அமராவதி அணை மொத்த உயரம், 90 அடியில், 74.12 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வினாடிக்கு, 1,227 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது; வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையில், மொத்த உயரம் 60 அடியில், 47.58 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. நீர்வரத்து, வினாடிக்கு 956 கன அடியாகவும், நீர் வெளியேற்றம், 351 கன அடியாகவும் இருக்கிறது.
கலெக்டர் ஆய்வு திருப்பூர் மாநகராட்சி வார்டுகளில், மழை வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில், கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி கமிஷனர் அமித், ஆர்.டி.ஓ., சிவபிரசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை, நல்லாறு, ஜம்மனை ஓடை பகுதிகள், காந்திநகர் ஓடை, சங்கிலிப்பள்ளம் பகுதிகளை பார்வையிட்டனர். மாவட்ட அளவில் 41 இடங்களில் வெள்ள அபாயம் உள்ளது. இதனால், 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்த கலெக்டர், வெள்ள அபாயங்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க, பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைத்து தயார்நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.