/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சந்தோஷமாக' சிறகடிக்கும் இளைஞர்!
/
'சந்தோஷமாக' சிறகடிக்கும் இளைஞர்!
ADDED : பிப் 16, 2025 02:34 AM

''பட்டாம் பூச்சியை தேடிப் போனால், அகப்படாது; அதுவே மலர்ச் செடிகள் பூத்துக்குலுங்கும் ஒரு சிறிய பூங்காவை அமைத்தால், பட்டாம் பூச்சிகள் தானாக வந்து சேரும் என்ற மனநிலையை வளர்த்து, வாய்ப்புகளை வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன்; அதன் விளைவு, சினிமா என்கிற கலையுலக வாசலுக்குள் காலடி வைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது'' என்கிறார், 'பறந்து போ' சினிமாவில் நடித்த சந்தோஷ்.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குடியிருக்கும் சந்தோஷ், 28 வயதான அந்த இளைஞர் கூறியதாவது:
பி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்த பின், 'ஸ்டார்ட் அப்' துறையில், புதிதாக தொழில் துவங்க முனைப்புக் காட்டினேன்.
கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் போதே, ரத்தம் எடுக்காமல் சர்க்கரை நோயை கண்டறிய ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவை கண்டறியும் ஒரு கண்டுபிடிப்பு, மாநில அரசிடம் சமர்பித்தேன். இதனை பாராட்டி, சிறந்த சமூக பங்களிப்பு என்ற விருது வழங்கினார்கள்.
என் வழிகாட்டி ஆசிரியரின் ஊக்குவிப்புடன், நீர் மூழ்கி கப்பல் பாதுகாப்பு தொடர்பான எனது கண்டுபிடிப்பை பாராட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பரிசு பெற்றுள்ளேன்.
அதன்பின், 'தசாப்தம்' என்ற குறும்படத்தில் நடித்தேன். இது, சினிமா மீதான ஆசையை எனக்கு ஏற்படுத்தியது; என் பெற்றோரும் ஊக்குவித்தனர். அதனால், சென்னையில் தங்கி, சினிமாவுக்காக முயற்சித்தேன்.
எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் விளம்பர படங்களில் நடித்தேன்.
'கற்றது தமிழ்' இயக்குனர் ராம், 'பறந்து போ' என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்த படம், நெதர்லாந்து ரோட்டார்டாமில் நடந்து வரும் சர்வேதச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தம்பிதுரை இயக்கத்தில் 'கோல்டு கால்' என்ற சினிமாவில், ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரு படங்களும், கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா துறையில் அடுத்தடுத்து வாய்ப்புக்கான தேடலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

