/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அறுவடை' விவசாய கண்காட்சி துவக்கம்; இன்றும், நாளையும் நடக்கிறது
/
'அறுவடை' விவசாய கண்காட்சி துவக்கம்; இன்றும், நாளையும் நடக்கிறது
'அறுவடை' விவசாய கண்காட்சி துவக்கம்; இன்றும், நாளையும் நடக்கிறது
'அறுவடை' விவசாய கண்காட்சி துவக்கம்; இன்றும், நாளையும் நடக்கிறது
ADDED : மே 02, 2025 09:03 PM

உடுமலை; உடுமலையில், 'அறுவடை' விவசாய கண்காட்சி நேற்று துவங்கியது; நாளை வரை நடக்கும் இதில், 300 அரங்குகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்து வருகின்றன.
உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், 'அறுவடை' விவசாய கண்காட்சி, உடுமலை ஜி.வி.ஜி.,கலையரங்கில் நேற்று துவங்கியது. துவக்கவிழாவிற்கு, உடுமலை தமிழிசைசங்க தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தமிழிசைச்சங்க செயலாளர் சண்முகசுந்தரம், ஆலோசகர் ஸ்ரீதர், தொழில் வர்த்தகசபை தலைவர்கள் பொள்ளாச்சி வெங்கடேஷ், உடுமலை அருண்கார்த்திக், கால்நடை பல்கலை முதல்வர் மணிவண்ணன், வாணவராயர் வேளாண் கல்லுாரி முதல்வர் பிரபாகர், நகராட்சி தலைவர் மத்தீன், அறுவடை விவசாய கண்காட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் பேசியதாவது:
விவசாயிகள் தங்கள் குழந்தைகளை விவசாயம் படிக்க வைத்து, லாபகரமான விவசாயமாக மாற்ற வேண்டும்.
பொள்ளாச்சியில், நுாறு விவசாயிகள் வரை இணைந்து, ஜாதிக்காய் சாகுபடி செய்து, அதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி, இன்று பொள்ளாச்சி ஜாதிக்காய் என, தனித்துவத்தை உருவாக்கியுள்ளனர்.
விவசாயிகள், ஒரே மாதிரியான சாகுபடியை மேற்கொள்ளாமல், வருவாய் ஈட்டும் வகையில், பல்வேறு பயிர் சாகுபடியில் ஈடுபட வேண்டும்.
லாபம் தரும் சாகுபடி பயிர்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி என கவனம் செலுத்தினால், ஒரு ஏக்கரில், ரூ. 10 லட்சம் வரை வருவாய் பார்க்கலாம். சிறிய அளவில், விவசாய நிலம் இருந்தால், வேளாண்மையில் இயந்திரங்களை பயன்படுத்த, விவசாயிகள் ஒருங்கிணைந்து, நிலங்களை இணைத்து பயிர் சாகுபடி செய்தால், செலவு குறைந்து, அதிக வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு, பேசினார்.
'சிறுதுளி' அமைப்பு தலைவர் வனிதா மோகன் பேசுகையில்,'' தொழில் துறையால் பணம் ஈட்ட முடியும். ஆனால், விவசாயம் என்பது வாழ்வியல் முறையாகும்.
உணவு அவசியம் என்பதை உணர்ந்து, தொழில் துறையினர் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்,' என்றார்.
கண்காட்சியில், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் சார்ந்த துறைகள், கேரளா மாநிலம், டில்லி, பெங்களூரு, சென்னை, மதுரை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தனியார் நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள், விதை, உரம் என நடவு முதல் அறுவடை, அதற்கு பின் மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றுதல் தொழில் நுட்பம் ,இயற்கை விவசாயம், கால்நடை, கோழி வளர்ப்பு என, 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, செயல்விளக்கமும், விற்பனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தினமும் பல்வேறு தலைப்புகளில், வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று, விவசாயிகள், பல்வேறு மாவட்டங்களிலுள்ள வேளாண் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்றும், நாளையும் கண்காட்சி நடக்கிறது.