/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைேயோரம் எங்கும் முளைத்த ஆக்கிரமிப்புகள்: அகற்றாமல் 'வேடிக்கை'
/
சாலைேயோரம் எங்கும் முளைத்த ஆக்கிரமிப்புகள்: அகற்றாமல் 'வேடிக்கை'
சாலைேயோரம் எங்கும் முளைத்த ஆக்கிரமிப்புகள்: அகற்றாமல் 'வேடிக்கை'
சாலைேயோரம் எங்கும் முளைத்த ஆக்கிரமிப்புகள்: அகற்றாமல் 'வேடிக்கை'
ADDED : ஏப் 18, 2025 11:41 PM

திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சாலை வரை நீண்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் தத்தளிக்கின்றன. இதை கண்டுகொள்ளாமல், அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். விபத்துக்கு அடிகோலும் என்பதை உணர்ந்தும், ஆக்கிரமிப்புகளை விட்டுவைத்துள்ள அதிகாரிகள், இவற்றை அகற்ற அதிரடி காட்ட வேண்டியது அவசியம்.
இரு மடங்கு வாகனங்கள் தத்தளிக்கின்றன சாலைகள்
திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 14 லட்சம். தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் வரை வந்து செல்கின்றனர். கல்வி, மருத்துவம், தொழில், வேலை, வியாபாரம், வர்த்தகம், சேவை உள்ளிட்ட பணி நிமித்தமாக வருவோர் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், வாடகை வாகனங்கள், சொந்த வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியன எண்ணிலடங்காத வகையில் வந்து செல்கின்றன.
அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு ஆகியன பிரதான ரோடுகளாக உள்ளன.
மாநகரில் உள்ள ரோடு வசதி 2 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் அளவில் தான் உள்ளது. ஆனால், 4 லட்சம் வாகனங்களுக்கும் மேல், பயன்படுத்துவதால் பெரும்பாலான ரோடுகள் போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. நகரப் பகுதிக்குள் வாகனத்தை ஓட்டிச் செல்வதே பிரம்மப் பிரயத்தனமாக உள்ளது.
வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், கண்காணித்தும் வருகின்றனர். இருப்பினும் இது ஒரு முழுமையான தீர்வாக இல்லாத நிலை தான் உள்ளது.
சாலையோரம் முழுக்கஆக்கிரமிப்பு அதிகரிப்பு
போக்குவரத்து நெரிசலுக்கு அதிகப்படியான வாகனங்கள் ஒரு காரணமாக இருந்தாலும், ரோட்டோர ஆக்கிரமிப்புகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. நகரின் அனைத்து பிரதான ரோடுகள், போக்குவரத்து நெரிசல் மிக்க ரோடுகள் என கணக்கு வழக்கு இன்றி, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தள்ளு வண்டி கடைகள், பிளாட்பாரக் கடைகள், ரோட்டோரம் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் தங்கள் இடத்தைக் கடந்தும் பொருட்களை பரப்பி வைத்துக் கொள்வது போன்றவற்றால் ரோடுகளில் பெருமளவு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குறுகி வருகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பிரதான ரோடுகளில் கடும் நெருக்கடியும், நெரிசலும் ஏற்படுகிறது.
சமரசம் இன்றி அதிரடி தேவை
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். அரசியல் அழுத்தம், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அமைப்புகள், மாமூல் வசூல் போன்ற பல காரணங்களால் எந்த துறையும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்வதில்லை. இவற்றைெயல்லாம் புறந்தள்ளி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து, இதில் எந்த சமரசமும், அரசியல் தலையீடும் இன்றி களம் இறங்கினால் மட்டுமே திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
இதுபோன்ற ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் ரோட்டில் நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சனிக்கிழமை ஆய்வு கைவிட்ட நடைமுறை
மாநகராட்சி அலுவலர் கூறியதாவது: மாதம் தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படுகிறது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்ற சிறப்பு குழு நிர்ணயித்து மாதம் தோறும் ஒரு சனிக்கிழமை இப்பணி நடந்தது. அதன் பின் பணிப் பளு காரணமாக இந்நடைமுறை கைவிடப்பட்டு விட்டது.இடையூறாக உள்ள ரோட்டோர கடைகள், தள்ளு வண்டிகள் அகற்றச் சென்றால் அரசியல் அழுத்தம், அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு என பல விதமான தடைகள் வருகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பு குழு அமைத்து, ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து உடனடியாக அகற்றவும், மீண்டும் அவை ஏற்படாத வகையிலும் நிரந்தர தீர்வு காண வேண்டும்.