/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்; கிடப்பில் மேம்பாட்டு பணி
/
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்; கிடப்பில் மேம்பாட்டு பணி
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்; கிடப்பில் மேம்பாட்டு பணி
செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவுகள்; கிடப்பில் மேம்பாட்டு பணி
ADDED : செப் 25, 2024 08:33 PM
உடுமலை : செஞ்சேரிமலை ரோட்டில், அபாய வளைவுகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்துள்ளது.
உடுமலையில் இருந்து குறிஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது. காற்றாலைகள் மற்றும் நுாற்பாலைகள் அதிகம் அமைந்துள்ள பகுதி வழியாக இந்த ரோடு செல்கிறது.
நீண்ட காலமாக இந்த ரோடு ஒருவழித்தடமாக இருந்தது. விரிவாக்கம் செய்யப்படாததால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நீண்ட இழுபறிக்கு பிறகு, சில ஆண்டுகளுக்கு, முன், குறிப்பிட்ட துாரம் ரோடு இடைவழித்தடமாக விரிவாக்கப்பட்டது.
இருப்பினும், இந்த ரோட்டிலுள்ள அபாய வளைவுகள் மேம்படுத்தப்படவில்லை. குறிப்பாக, புக்குளம், பொட்டையம்பாளையம் பிரிவு, வெள்ளியம்பாளையம் பிரிவு, பொட்டிநாயக்கனுார் பிரிவு, மாலகோவில் அருகே, லிங்கமநாயக்கனுார் சந்திப்பு, சிந்திலுப்பு - அனிக்கடவு ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில், 'எஸ்' வடிவிலான அபாய வளைவுகள் அமைந்துள்ளன.
ரோடு விரிவாக்கத்தின் போது, இந்த வளைவுகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சில இடங்களில் மட்டும் வளைவையொட்டிய பள்ளங்களில், கம்பித்தடுப்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இருப்பினும், அபாய வளைவுகளில் விபத்துகள் அதிகரித்துள்ளது.
வளைவு பகுதி அருகிலேயே பஸ் நிறுத்தங்கள் இருப்பதால், போக்குவரத்திலும் சிக்கல் ஏற்படுகிறது.
உடுமலையில் இருந்து செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை வழியாக கோவைக்கு செல்லும் வாகனங்கள், இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றன. இதனால், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, அபாய வளைவு பகுதியை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.