/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி கால்வாயில் ஆபத்தான கழிவுகள் தேக்கம்; பாசன நீரை பாதுகாக்க வலியுறுத்தல்
/
அமராவதி கால்வாயில் ஆபத்தான கழிவுகள் தேக்கம்; பாசன நீரை பாதுகாக்க வலியுறுத்தல்
அமராவதி கால்வாயில் ஆபத்தான கழிவுகள் தேக்கம்; பாசன நீரை பாதுகாக்க வலியுறுத்தல்
அமராவதி கால்வாயில் ஆபத்தான கழிவுகள் தேக்கம்; பாசன நீரை பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 09:02 PM

உடுமலை; அமராவதி பிரதான கால்வாய் கரையில் அபாயகர கழிவுகள் கொட்டப்படுவதால், பாசன நீர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுகளை அகற்றி, கால்வாயை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனம், பிரதான கால்வாய் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதோடு, வழியோரத்திலுள்ள, கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாடு ஆதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில், அமராவதி பிரதான கால்வாயை பாதிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையிலும், மடத்துக்குளம் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை, சாக்கடை மற்றும் இறைச்சிக்கழிவுகள், கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள பிரதான கால்வாய் கரையிலேயே மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது.
கால்வாயில் பாசனத்திற்கு நீர் செல்லும் நிலையில், கரையில், கொட்டப்படும் கழிவுகள், பாசன நீரில் நேரடியாக கலந்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி மது பாட்டில்கள் நேரடியாக, சாகுபடி வயல்களுக்குள் புகுந்து, பயிர்களை பாதித்து வருகிறது. கால்வாயில் நேரடியாக கலக்கும் கழிவுகள், மடைகளில் அடைத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளால், கடும் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும், படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்க மற்றும் குடிநீர் எடுத்தும் வருகின்றனர்.
கால்வாயின் இரு புறமும், ஜீப் டிராக் அமைந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலம், குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
பாசன நீர் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போதுவரை கழிவுகள் கால்வாய் கரையிலிருந்து அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.
அதே போல், அமராவதி அணை துவங்கி, பிரதான கால்வாயின் வழியோரத்திலுள்ள, எலையமுத்துார், பார்த்தசாரதிபுரம், கல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கால்வாய் கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளிலிருந்தும், சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும், குப்பை, இறைச்சி கழிவுகள், கட்டட கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுகிறது.
பாசனம், கால்நடைகள், பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டு ஆதாரமாக உள்ள அமராவதி பிரதான கால்வாய் குப்பை கிடங்காக மாற்றுவதை தடுக்க, கழிவுகளை உடனடியாக அகற்றி, பாசன கால்வாயை பாதுகாக்க நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.