/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'
/
பாலியஸ்டர் துணி கழிவுகளால் 'தலைவலி'
ADDED : பிப் 23, 2026 06:21 AM

திருப்பூர் : செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளர்ச்சி பெற்று வந்தாலும், பாலியஸ்டர் 'கட்டிங் வேஸ்ட்' கழிவை அகற்ற வழியில்லாததால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
பின்னலாடை தொழில், பெரும்பாலும் பருத்தி நுாலிழை துணிகளை மையமாக கொண்டே இயங்கி வருகிறது; இருப்பினும், வெளிநாட்டு ஆடை வர்த்தகத்தில், பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு தான் அதிக வரவேற்பு. கோடைக்கால சீசன் ஆர்டர்களில் மட்டுமே பருத்தி ஆடைகள் இடம்பெறுகின்றன.
பல்வேறு செயற்கை நுாலிழை ஆடைகள் இருந்தாலும், பாலியஸ்டர் துணியில் இருந்து வெளியாகும் 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகள், விலைக்கு வாங்கப்படாததால், கழிவாக கண்ட இடங்களில் கொட்டுவது அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, ஒவ்வொரு கழிவு பொருட்களும் காசாகிறது.
பின்னல் துணி வேஸ்ட் கழிவுகளை வாங்கி, அவற்றை நுாலாக பிரித்து, இயுந்திரம் மற்றும் வாகனம் துடைக்க பயன்படுத்தி வந்தனர். தற்போது, 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகளில் இருந்து சிறிய ஆடை தயாரிப்பு, மறுசுழற்சி முறையில் நுால் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு என, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கழிவுகளை வாங்கி, கால்மிதியாக தயாரித்து விற்பனை செய்வதிலும் திருப்பூர் சிறந்து விளங்குகிறது.
செயற்கை நுாலிழை என்ற பெயரில், வடமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் பாலியஸ்டர் துணிகளால், புதிய சவால் எழுந்துள்ளது. பாலியஸ்டர் பின்னல்துணியில் இருந்து உருவாகும், 'கட்டிங் வேஸ்ட்' எதற்குமே உதவாத வேஸ்ட் என்று ஒதுக்கப்படுகிறது. பின்னல் துணி வேஸ்ட்டின் கடைசி கழிவுகளை, தீ எரிக்கவாவது பயன்படுத்த முடிகிறது; பாலியஸ்டர் அதற்கும் உதவாது.
இதனால் குறு உற்பத்தியாளர்கள், ஆடை வடிவமைப்புக்கான, 'கட்டிங் ' முடிந்ததும்; 'வேஸ்ட்'டை அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். வேறு வழியே இல்லாததால், குப்பையில் வீசுகின்றனர். மேலும் சிலர், டூ வீலரில் எடுத்துச்சென்று, ஆள் நடமாட்டம் குறைவான, நொய்யல் ஆற்றோர ரோடுகளில் வீசிச்செல்கின்றனர். இப்படியாக, சில மூட்டைகளாக சேர்ந்தபிறகு, தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவுக்கு, துர்நாற்றமும், புகையும் பரவுகிறது.
--
பாலியஸ்டர் 'கட்டிங் வேஸ்ட்'கள் சாலையோரம் வீசப்பட்டுள்ளன.
இடம்: நொய்யல் கரையோரம், சலவைப்பட்டறை வீதி.

