/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க': சுகாதாரத்துறை 'அட்வைஸ்'
/
'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க': சுகாதாரத்துறை 'அட்வைஸ்'
'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க': சுகாதாரத்துறை 'அட்வைஸ்'
'தண்ணீரை காய்ச்சிக் குடிங்க': சுகாதாரத்துறை 'அட்வைஸ்'
ADDED : மே 27, 2025 07:54 PM
உடுமலை; 'பருவமழை காரணமாக, நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும். நடப்பாண்டில் இந்த பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. இதனால், வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
தேங்கிய மழைநீரில் லார்வா, கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளைச்சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வசிப்பிடங்களை துாய்மையாக வைக்க வேண்டும். வீடுகளில் திறந்த வெளியில் தொட்டி, தேங்காய் சிரட்டை, மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்கள் இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும்.
வீட்டையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்; மழைக்காலங்களில் முடிந்த வரை சூடான ஆகாரங்களை பருகுவது ஆரோக்கியம் பேண உதவும்.
குழந்தைகள், பெரியவர்கள், இணைநோய் உள்ளவர்களை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் குறையாமல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தொடர்ந்தால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு வந்து டாக்டரை சந்தித்து, ஆலோசனை சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொண்டு, நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.