ADDED : ஏப் 26, 2024 11:49 PM
உடுமலை:வெப்ப அலை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உரிய வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காற்றோட்டமான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவேண்டும். இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்பது சிறந்தது. வெளியே செல்லும்போது, மறக்காமல் குடை எடுத்துச்செல்லலாம்.
தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். பயணங்கள் உள்பட வெளியே செல்லும்போது, கைவசம் ஓ.ஆர்.எஸ்., கரைசல், இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சை ஜூஸ் வைத்திருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அவற்றை பருகி, நீரிழப்பை தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்கும், சீரான இடைவெளியில், போதுமான அளவு நீராகாரம் கொடுக்கவேண்டும். வெப்பம் சார்ந்த நோய் பாதிப்புகள் உள்ளனவா என, பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நிற சிறுநீர், நீரிழப்பை வெளிப்படுத்தும்.
கூரை வீடுகளில் உள்ள மின் ஒயர்கள் உருகி, மின்கசிவால், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், நிலம் சார்ந்த ஆவணங்கள் உட்பட முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். முதியவர்கள் உடல் நிலையை தினமும் இருமுறை பரிசோதிக்க வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்க வேண்டும்; குளிர்ந்த நீரில் குளிக்கச்செய்ய வேண்டும்.
நுாறு நாள் பணியாளர்கள், மதியம், 12:00 மணிக்குமேல் பணிக்குச் செல்ல வேண்டாம்.

