/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹலோ... நான் ஸ்டாலின் பேசறேன்! மாணவரை உற்சாகப்படுத்திய முதல்வர்
/
ஹலோ... நான் ஸ்டாலின் பேசறேன்! மாணவரை உற்சாகப்படுத்திய முதல்வர்
ஹலோ... நான் ஸ்டாலின் பேசறேன்! மாணவரை உற்சாகப்படுத்திய முதல்வர்
ஹலோ... நான் ஸ்டாலின் பேசறேன்! மாணவரை உற்சாகப்படுத்திய முதல்வர்
ADDED : மே 09, 2025 11:56 PM
திருப்பூர்: மாணவ, மாணவியரின் பள்ளிக்கல்வியின் இறுதியாண்டு, பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. வெற்றி பெற்றவர்கள், மகிழ்ச்சியில் திளைத்தனர். தோல்வியடைந்தவர்கள், சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்களின் மொபைல் எண்களை வழங்கியிருக்கின்றனர். அந்த மொபைல் எண்களுக்கு ஒரு அழைப்பு... 'ஹலோ...' என சொல்வதற்குள், ''ஹலோ...நான் ஸ்டாலின் பேசறேன்...'' என்ற முதல்வரின் குரல்.
'உங்கள் பிள்ளை தேர்ச்சியடைந்த செய்தி கேட்டு, உங்களை போலவே நானும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன். உங்க பிள்ளையை கட்டாயம் மேல் படிப்பில நீங்க சேர்க்கணும். தமிழ்நாடு அரசு, அதுக்கு பல திட்டங்களை வைச்சிருக்கு.
அவற்றையெல்லாம் முழுசா பயன்படுத்திக்கணும்ன்னு, அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கல்வி தான், உங்கள் பிள்ளைக்கு நீங்கள் தருகிற மிகப்பெரிய சொத்து. யாராலேயும், எந்த காலத்திலும் அழிக்க முடியாத சொத்து. உங்களுக்கு உதவ எல்லா நிலையிலும், தமிழக அரசு தயாராக இருக்கு.
வளமான எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்கிற உங்கள் பிள்ளைக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,' இவ்வாறு பேசி முடிக்கிறார், முதல்வர்.
அதே நேரம், தோல்வியடைந்த மாணவ, மாணவியரின் மொலைப் எண்களுக்கு முதல்வரின் பெயரில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. அதில், 'தேர்ச்சி பெற இயலாத மாணவர்களே, துவண்டு விடாதீர்கள்.
உடனடியாக துணைத் தேர்வில் பங்கேற்று, வெற்றி பெறுங்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீர்வீர்கள். அதற்கான வாய்ப்புகளை அரசு உறுதி செய்யும்,' என, தமிழக முதல்வரின் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறையினர் கூறுகையில், ''பிளஸ் 2 முடிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கட்டாயம் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது.
அந்த அடிப்படையில் தான் இதுபோன்ற ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன,' என்றனர்.