/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் வருவாய் அதிகம்; வசதிகள் குறைவு! நிறைவேறாத பல கோரிக்கைகள்
/
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் வருவாய் அதிகம்; வசதிகள் குறைவு! நிறைவேறாத பல கோரிக்கைகள்
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் வருவாய் அதிகம்; வசதிகள் குறைவு! நிறைவேறாத பல கோரிக்கைகள்
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் வருவாய் அதிகம்; வசதிகள் குறைவு! நிறைவேறாத பல கோரிக்கைகள்
ADDED : ஜூன் 29, 2025 11:24 PM

உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தேவையான ரயில்களை இயக்க வேண்டும் என இப்பகுதி பயணியர் வலியுறுத்தியுள்ளனர்
மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் அமைந்துள்ள இந்த ஸ்டேஷன் வாயிலாக, அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னை - பாலக்காடு, பாலக்காடு - திருச்செந்துார், மதுரை - கோவை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது,மூன்று பிளாட்பார்ம்களுடன் உடுமலை ரயில்வே ஸ்டேஷனும் மேம்படுத்தப்பட்டது.
துவக்கத்தில், ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. படிப்படியாக ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டதால், பயணியர் எண்ணிக்கையும் கூடுதலானது.
தற்போதைய கணக்கீடுகளின்படி,உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் ரயில்வேக்கு கிடைத்து வருகிறது.
மேலும், நாள்தோறும், இந்த ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சராசரியாக, 1,500 பேரை தாண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக கிடைக்கும் வருவாயும், பயணியர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், அடிப்படை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. குறிப்பாக குடிநீர் வசதி கூட இல்லாமல், பயணியர் பாதிக்கின்றனர். குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதே போல், பிளாட்பாரத்துக்கு குறிப்பிட்ட துாரம் மட்டுமே மேற்கூரை அமைத்துள்ளனர். மழை மற்றும் வெயில் காலங்களில், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
கழிப்பிட வசதியும் போதுமான அளவு இல்லை. இந்த அடிப்படை வசதிகளை மட்டுமாவது மேம்படுத்த வேண்டும் என உடுமலை பகுதி பயணியர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கை குறித்து, மதுரை ரயில்வே கோட்டம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் வருவாய் கூடுதலாகி வரும் நிலையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ரயில்கள் என்னாச்சு
அகல ரயில்பாதையில் சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். திருச்செந்துாருக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் நிலையில், போதிய பெட்டிகள் இல்லாமல் பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
நாள்தோறும் இந்த ரயிலுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது, ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான பயணியர் பயன்பெற்று வந்தனர்.
இந்த ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி, தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். ஆன்மிக, சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், இந்த ரயிலை இயக்கினால், ரயில்வேக்கு வருவாயும் அதிகரிக்கும்.
மேலும், சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தினால், தொழில் நிறுவனத்தினரும் பயன்பெறுவார்கள்; வருவாயும் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.