/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் தரம் உயர்ந்த பள்ளிகள்
/
கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் தரம் உயர்ந்த பள்ளிகள்
கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் தரம் உயர்ந்த பள்ளிகள்
கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் தரம் உயர்ந்த பள்ளிகள்
ADDED : அக் 19, 2025 02:48 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் இரண்டு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆக. மாதம் வெளியிட்ட அறிவிப்பில், ''பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகவும், முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாகவும் 2025- 2026ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படுகிறது. உயர்நிலை பள்ளிக்கு கூடுதலாக பட்டதாரி ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிக்கு பாட பிரிவுக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியரும் நியமிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து இப்பள்ளிகளில் பணியில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, பாப்பநாயக்கன்பாளையம் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பும், முதலிபாளையம் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பும் துவங்கப்பட்டுள்ளது.
நீண்ட துாரம் பயணித்து அருகில் உள்ள வேறு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவ, மாணவியர் மீண்டும் தங்கள் படித்த பள்ளியிலேயே இணைந்துள்ளனர். இருப்பினும், மாணவர் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. பெற்றோர் தரப்பில், ஆசிரியர் நியமனம் முழுமை பெறாமல் இருப்பதால், தரம் உயர்த்தப்பட்டு, வகுப்புகள் துவங்கியுள்ள பள்ளிக்கு புதிய மாணவர்களை சேர்க்க பலரும் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்வித்துறை தரப்பில்,' நடப்பாண்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான வகுப்பு, பாடம் எடுப்பதில்லை. ஆகையால், ஆசிரியர் நியமனம் முழுமை பெறாமல் உள்ளது; விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்,' என்கின்றனர்.