/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயரமான வேகத்தடை; விபத்துகளுக்கு அச்சாரம்
/
உயரமான வேகத்தடை; விபத்துகளுக்கு அச்சாரம்
ADDED : அக் 22, 2025 11:14 PM
திருப்பூர்: திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி பகுதியில், அவிநாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறை ரோடு, சாமளாபுரம் வரை செல்கிறது.
நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், வேகத்தடை அமைப்பது, மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
வாகனங்களில் வேகத்தை தடுத்து, விபத்து நடக்காமல் தடுக்க, போக்குவரத்து போலீசார், தடுப்புகளை ரோட்டின் குறுக்கே வைக்கின்றனர். வேகத்தடை அமைத்தாலும், இதுகுறித்த அறிவிப்பு பலகையை, இரண்டு மார்க்கங்களிலும் வைக்க வேண்டும்.
வேகத்தடையின் மீது வெள்ளை நிற குறியீடு செய்ய வேண்டும்; இரவில் ஒளிரும் வகையிலான, பட்டைகளை ரோட்டில் பொருத்துவதும் கட்டாயம்.
இருப்பினும், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், போதிய முன்னறிவிப்பு செய்யாமல் திடீரென வேகத்தடை அமைத்துள்ளனர்.
மங்கலம், வேட்டுவபாளையம் ஸ்டாப்புக்கு அடுத்த தனியார் பள்ளி முன்பு இரண்டு பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வீடுகள் இல்லாததாலும், நடமாட்டம் குறைவு என்பதாலும் வாகனங்கள் சற்று வேகமாக வருவது வழக்கம்.
தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இதனால், இந்த வேகத்தடையால், தினமும் விபத்து ஏற்பட்டு வருகிறது. போதிய முன்னறிவிப்பு பலகை வைக்கவில்லை. இரவில் ஒளிரும் பட்டைகளும் பொருத்தவில்லை.
வேகத்தடையின் உயரத்தை குறைப்பதுடன், போதிய இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.