/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்களை சேதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்
/
மரங்களை சேதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்
ADDED : ஜூலை 18, 2025 11:34 PM

பொங்கலுார்; பொங்கலுார் அருகே மரங்களை நெடுஞ்சாலை துறையினர் சேதப்படுத்தியது, பசுமை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை - திருச்சி ரோடு, பொங்கலுார், கருணைபாளையம் பிரிவில் இருந்து கண்டியன் கோவில், பெருந்தொழுவு வழியாக முதலிபாளையம் செல்லும் ரோடு உள்ளது. ரோட்டோரத்தில் ஏராளமான வேப்ப மரங்கள் வளர்ந்துள்ளன.
மரத்தின் கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அவற்றை ரம்பம் கொண்டு அறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும். மரத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் வெட்ட வேண்டும்.
இதற்கெல்லாம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ரோட்டோரத்தில் இருந்த ஏராளமான மரங்களின் கிளைகள் ஒடிக்கப் பட்டுள்ளது.
இதனால், மரங்கள் பலம் இழந்து காணப் படுகிறது. கிளைகள் முறிக்கப்பட்ட மரங்களின் பிற கிளைகள் காற்று, மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஒடிந்து விழவும், மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அரைகுறையாக உள்ள மரங்களால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஒரு மரத்தை வைத்து வளர்ப்பதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகும்.
ஆனால் நெடுஞ்சாலை துறையோ தன்னிச்சையாக வளர்ந்த மரங்களைக் கூட தாறுமாறாக உடைத்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி, இதுபோன்ற செயல்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைவிட வேண்டுமென, பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.