/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை தேவை! அரசுக்கு மலைவாழ் சங்கம் மனு
/
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை தேவை! அரசுக்கு மலைவாழ் சங்கம் மனு
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை தேவை! அரசுக்கு மலைவாழ் சங்கம் மனு
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை தேவை! அரசுக்கு மலைவாழ் சங்கம் மனு
ADDED : நவ 11, 2025 07:02 AM
உடுமலை: ' திருப்பூர் வனக்கோட்டத்திலுள்ள, 15 மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுரிமை வழங்க வேண்டும்; மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை இல்லை. அம்மக்கள், 2006 வன உரிமைச்சட்டப்படி, உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திருமூர்த்திமலை, குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய குடியிருப்புகளை தளி பேரூராட்சியில் இணைத்து, இரு வார்டுகளை உருவாக்கி மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், மற்ற மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, இதுவரை உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கவில்லை.
இது குறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை தாலுகாவிலுள்ள, 15 மலைக்கிராம மக்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
வன உரிமைச்சட்டத்தின் கீழ், வன கிராமங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வீட்டுமனை, விவசாய நில பட்டா வழங்கியுள்ளனர்.
ஆனால், மாவடப்பு, காட்டுப்பட்டி, குழிப்பட்டி, கருமுட்டி, ஈசல்திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய, 10 வனக்கிராம மக்களுக்கு உள்ளாட்சியில் ஓட்டுரிமை வழங்கவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஓட்டுரிமை வழங்குவது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி ஓராண்டாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

