/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலை உரம் நுால் மில்லில் பதுக்கல்
/
மானிய விலை உரம் நுால் மில்லில் பதுக்கல்
ADDED : டிச 27, 2024 02:31 AM

வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், பச்சாபாளையம் அடுத்த அத்தாம்பாளையத்தில், ரமேஷ், 50, என்பவரின் நுால் மில் உள்ளது. அங்குள்ள கிடங்கில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
நேற்று, கோவை வேளாண்மை துறை தரக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அங்கு தலா, 45 கிலோ எடையுள்ள 3,210 யூரியா மூட்டைகள் இருந்தன. ரமேஷ், அவரது தம்பி தாமரைக்கண்ணன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் இருந்து இவற்றை வாங்கி வந்து, வேறு சாக்கு மூட்டையில் மாற்றி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு, மூட்டை 1,500 ரூபாய் விலை வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
வழக்கமாக ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொருட்களே கடத்தப்படும் நிலையில், நுாதனமாக உரம் கடத்தல் செய்யப்படும் விவகாரம் குறித்து, ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

