ADDED : ஜன 02, 2026 05:43 AM

திருப்பூர்: கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையம் இரண்டு நாட்களாக செயல்படவில்லை; மையத்துக்கு வந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக, பொதுமக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும்; எல்காட் வாயிலாக, கலெக்டர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்பட்டுவருகின்றன.
திருப்பூரில், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் 'எல்காட்' ன் ஆதார் பதிவு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், புதிய ஆதார் மற்றும் புதுப்பித்தலுக்காக, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தினம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அரையாண்டு விடுமுறை காரணமாக, ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்காக, கடந்த ஒரு வாரமாக, மாணவ, மாணவியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், கடந்த டிச. 31 மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று, கலெக்டர் அலுவலக ஆதார் மையம் பூட்டப்பட்டிருந்தது. ஆண்டு தணிக்கை காரணமாக, டிச. 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் மையத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 2 ம் தேதி முதல் (இன்று முதல்) வழக்கம் போல் செயல்படும் என நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்.
ஆனால், மக்களுக்கு இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படாததால், பொதுமக்கள் பலரும், ஆதார் மையத்துக்கு வந்துவிட்டு, திரும்பிச்சென்றனர். இதனால், பலருக்கும் வீண் அலைச்சல் ஏற்பட்டது.
பள்ளி நாட்கள், வேலை நாட்களில், விடுப்பு எடுக்க வேண்டியுள்ளதால், மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள், ஆதாரில் திருத்தம் செய்வதற்காக, விடுமுறை நாட்களிலேயே மையத்துக்கு வருகின்றனர். அந்நாட்களில் ஆதார் மையம் பூட்டப்படுவது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, செயல்படாத நாட்கள் குறித்த விவரங்களை, முன்னரே அறிவிப்பு செய்யவேண்டும்.

