/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பான பணிக்கு கிடைத்த கவுரவம்
/
சிறப்பான பணிக்கு கிடைத்த கவுரவம்
ADDED : ஜன 27, 2026 07:09 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்துவரும் மாநகர, மாவட்ட போலீசார் 85 பேருக்கு, முதல்வர் பதக்கம்; 89 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற போலீசார் சிலர், தங்கள் பணிக்கால பயணத்தின் முக்கியமான இந்த தருணம் குறித்த, மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
மனோகரன் (எஸ்.எஸ்.ஐ.): கடந்த 2021ம் ஆண்டு முதலே, குடியரசு, சுதந்திர தின விழாவில், போலீஸ் படைப் பிரிவை வழிநடத்திச் செல்கிறேன். போலீசார் ஒவ்வொரும், இதுபோன்ற தேசிய விழாக்களில், கம்பீரமாக அணிவகுத்துச்செல்லும் வாய்ப்பை பெறவேண்டும். இன்று எனக்கு முதல்வர் பதக்கமும் கிடைத்திருக்கிறது; இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
வெள்ளைசாமி, (தலைமை காவலர்): போலீசாரை பொருத்தவரை, எந்த சூழலிலும், வேகமாகவும் அதேநேரம் விவேகத்தோடும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. எவ்விதமான தண்டனையும் பெறாத போலீசாருக்கே, இத்தகைய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. 17 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நிலையில், தற்போது முதல்வர் பதக்கம் கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்து, அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஊக்கமும், உற்சாகமும் பிறக்கிறது.
பிரகாஷ் (தலைமை காவலர்): நாட்டின் 77 வது குடியரசு தின விழாவில், எனக்கு முதல்வர் பதக்கம் கிடைத்திருப்பதை, வாழ்வின் முக்கிய தருணமாக கருதுகிறேன். இதனை, எனது சிறந்த பணிக்கு கிடைத்த, மாபெரும் வெகுமதியாக கொண்டாடுகிறேன்.

