/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை; மனுவே துணை
/
நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை; மனுவே துணை
ADDED : அக் 07, 2025 01:05 AM

திருப்பூர்;'குறைகளெல்லாம் தீரும்' என்ற நம்பிக்கையோடு, கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டது.
17 ஆண்டு போராட்டம்
------------------
பொன்நகர் பகுதி மக்கள்:
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, பொன்நகரின் மூன்று வீதிகளில், 52 குடும்பங்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறோம். கடந்த, 2008ல், நேரடியாக ஆய்வு செய்த தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஒரு வாரத்துக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், 17 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
சுடுகாடு 'மாயம்'(படம் உள்ளது)
--------------
வாரணாசிபாளையம் மக்கள்:
அவிநாசி தாலுகா, வாரணாசிபாளையத்தில், 120 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து, விவசாயம் செய்துவருகிறோம். இங்குள்ள சுடுகாட்டில், கடந்த 2009 -10ல், மாவட்ட ஊராட்சி நிதியில், எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. அதன்பின், 2017ல், நுாறுநாள் திட்டத்தில், மண் புழு உரம் தயாரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டது. தற்போது சுடுகாடு பகுதி இடத்தை அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், சிலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி விட்டனர். சுடுகாட்டை மீட்டுக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுடுகாடு ஆக்கிரமிப்பு
--------------
கணியூர் பேரூராட்சி மக்கள்:
மடத்துக்குளம் தாலுகா, கணியூர் பேரூராட்சி, மதியழகன் நகர், காந்தி வீதி பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பயன்பாட்டிலிருந்த சுடுகாட்டை, தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அங்கு தென்னை மரங்களை நட்டுவைத்துள்ளார். மூன்று தலைமுறைகளாக பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டை, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தர வேண்டும்.
மீட்டர் கட்டணம் மாறுமா?(படம் உள்ளது)
------------------
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர்:
தமிழகத்தில், பயணியர் ஆட்டோ, சரக்கு ஆட்டோ தொழிலில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. பன்னாட்டு கால் டாக்ஸி, பைக் டாக்ஸி நிறுவனங்களின் வருகையால், ஆட்டோ டிரைவர்களின் குடும்பங்கள் நலிவடைந்து வருகின்றன. ஆந்திர அரசு, நலிவடைந்த ஆட்டோ டிரைவர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் ஆட்டோ டிரைவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
சுத்திகரிப்பு மையம் கூடாது(படம் உள்ளது)
------------------
ப.வடுகபாளையம் புதுார் மக்கள்:
பல்லடம் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க, ப.வடுகபாளையத்தில் ஒருவாரத்துக்கு முன் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணியை பாதியிலேயே நிறுத்தினர். தற்போது மீண்டும் பணிகளை துவக்கியுள்ளனர். ப.வடுகபாளையம்புதுார் கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் பிரச்னை உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தால், நிலத்தடி நீரும் பாதித்து, விவசாயம், குடிநீராதாரத்தை இழக்க நேரிடும். ஊருக்கு மத்தியில் உள்ளதால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கவேண்டாம் என, கிராமசபாவிலும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அப்பகுதியில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்.
தீபாவளி போனஸ்
---------------
பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிகுமார்: தொழில்துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகை வழங்குகின்றன. பனியன் நிறுவனங்கள், அதிகபட்சமாக போனஸ் வழங்கி வந்த நிலை மாறி விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரமே இருப்பதால், போனஸ் பட்டுவாடா செய்யப்படுவதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
4வது முறையாக மனு
---
கொடுவாயை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாஜி, 'எல்லைப்பாளையம் ஊராட்சி, நிழலி கிராமத்தில் தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகள் கேட்டு, கடந்த பிப்., மாதம் முதல் இதுவரை மூன்று மூன்று மனு அளித்தும் எந்த பயனுமில்லை. நான்காவது முறையாக அளிக்கும் இந்த மனு மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்தார்.