/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை துறை சாதிக்க கைகொடுக்கும்; உலகப் புத்தொழில் மாநாடு மீது நம்பிக்கை
/
பின்னலாடை துறை சாதிக்க கைகொடுக்கும்; உலகப் புத்தொழில் மாநாடு மீது நம்பிக்கை
பின்னலாடை துறை சாதிக்க கைகொடுக்கும்; உலகப் புத்தொழில் மாநாடு மீது நம்பிக்கை
பின்னலாடை துறை சாதிக்க கைகொடுக்கும்; உலகப் புத்தொழில் மாநாடு மீது நம்பிக்கை
ADDED : அக் 03, 2025 10:06 PM

திருப்பூர் : 'இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை, மாபெரும் உற்பத்திப் பொருட்களாக மாற்றி, புதிய சாதனை படைக்க, பல்வேறு தரப்பினரும் சங்கமிக்கும், கோவை உலக புத்தொழில் மாநாடு கைகொடுக்கும்'' என, திருப்பூரை சேர்ந்த தொழில்வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், புத்தொழில் நிறுவனங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாக, கோவை,கொடிசியா வளாகத்தில், 'உலகப் புத்தொழில் மாநாடு - 2025', வரும், 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டி.என்., - ஸ்டார்ட் அப்) செய்து வருகிறது.
மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பல்கலை பிரதிநிதிகள் மற்றும் புத்தொழில் செயல்பாட்டாளர்கள் பங்கேற்கின்றனர். விண்வெளித் தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகன தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரு நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி அமைப்புகளின் கண்காட்சியும் இடம்பெறுகிறது.
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, அறிவுசார் கருத்தரங்குகள், விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்புகள், முதலீட்டாளர் சந்திப்புகள், புத்தாக்க காட்சி அரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. ''விரிவான ஏற்பாடுகளுடன், கோவையில் முதன்முறையாக நடக்கும் 'உலகப் புத்தொழில் மாநாடு' என்பது, கொங்கு மண்டலத்தின் தொழில் முனைவுக்கு முன்னோடியாக அமையும்; பின்னலாடை நகரான திருப்பூரும் இதன் மூலம் வாய்ப்புகளை பெறும்; குறிப்பாக இளைஞர்கள் சாதிக்க முடியும்'' என, தொழில் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்றங்களுக்கு தயாராகலாம்
பெரியசாமி, ஆலோசகர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:
'ஸ்டார்ட் அப்' கல்லுாரி மாணவர்கள், தொழில்முனைவோர் புதிதாக ஏதாவது செய்தால் மட்டுமே சிறப்பாக இருக்குமென முனைகின்றனர். ஏற்றுமதியாளர்களும், அமெரிக்காவுக்கு மாற்றாக, ஐரோப்பிய சந்தைகளை கைப்பற்ற, புதிய மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்கின்றனர். ஐரோப்பிய சந்தைகளை கைப்பற்ற, 'யுனிடோ' சில விவரங்களை பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, வாழை, பாக்குமரம், பனம்பழம் போன்ற பொருட்களில் இருந்து, நுாலுக்கான மூலப்பொருள், நுால் தயாரிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர். அதற்காக, 'ஸ்டார்ட் அப்' திட்டங்கள் அதிகம் கைகொடுக்கும். இந்நேரத்தில் 'தேசிய டெக்னிக்கல் மிஷன்' வாயிலாக, கல்லுாரி மாணவர்களுக்கு 'கம்யூனிட்டி சென்டர்' அமைத்து, புதிய புராஜக்ட் தயாரிக்க ஊக்குவிக்கப்படுகிறது. இந்நிலையில் 'உலக புத்தொழில் மாநாடு' நடப்பது, புதிய ஊக்குவிப்பாக அமையும்.
புதிய வழிகாட்டுதல் கிடைக்கும்
ராமன் அழகிய மணவாளன், தொழில் வர்த்தக ஆலோசகர்:
கல்லுாரி படிக்கும்போது, புதிய கண்டுபிடிப்புகள், சிறிய ஐடியாவாக இருந்தாலும், அதை எப்படி தொழிலாக மாற்றலாம் என்று, 'ஸ்டார்ட் அப்' திட்டத்தில் அரசு உதவுகிறது. 'ஸ்டார்ட் அப் இந்தியா', 'ஸ்டாண்ட் அப் இந்தியா', 'உத்தியாமி மித்ரா' என, பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஐடியாவை, மாதிரியாக உருவாக்கி, வணிக நோக்கில், பெரிய உற்பத்தி பொருளாகவும் மாற்றலாம். பல்வேறு படிநிலைகளைக் கடந்து, அதைு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாக மாற்ற வேண்டும். புத்தொழில் என்பது, தகவல் தொடர்பு மட்டுமல்ல; உற்பத்தியாக மாற்றினால், மாபெரும் வெற்றி பெற முடியும். உலக புத்தாக்க மாநாடு புதிய அணுகுமுறையுடன் அமையும். மாநாட்டில், கட்டாயம் பங்கேற்றால், புதிய வழிகாட்டுதல் கிடைக்கும்.
சரிவரப் பயன்படுத்த வேண்டும்
மணிகண்டன், பின்னலாடை உற்பத்தியாளர் மற்றும் 'பிராண்ட்' ஊக்குவிப்பாளர், திருப்பூர்:
தமிழ்நாடு 'ஸ்டார்ட் அப்', கொங்கு மண்டலத்தில் தான் அதிகம் வந்துள்ளது. அதன் காரணமாகவே, தமிழக அரசு, கோவையில் மாநாடு நடத்துகிறது. இதுவரை, ஜவுளித்துறையை மட்டுமே கவனித்து வந்தோம். இளம் தலைமுறையினர், புதிய தொழில் நுட்பத்தை தேடி செல்கின்றனர். ஜவுளியை மட்டுமே நம்பியிருக்க கூடாது; புதிய தொழில்களையும் கண்டறிய வேண்டும். புத்தொழில் மாநாட்டில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருவர். அடுத்த தலைமுறையினர் வரும்போது, அவர்களின் புத்தொழில் நுட்பங்களை அறிய முடியும்.
இன்றைய உலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும். நாம், இனிமேல் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் கிடைக்கும். மும்பை, டில்லியில் நடக்கும் இதுபோன்ற மாநாடு, சென்னையில் நடந்தது; தற்போது, கோவையில் நடக்கிறது. இதை நாம் தான் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டாயமாக, ஒவ்வொரு இளைஞரும் மாநாட்டு கண்காட்சியை பார்வையிட வேண்டும்.
திறமையை ஆவணமாக்கலாம்
- சபரி கிரீஷ், வர்த்தக ஆலோசகர், திருப்பூர்.
புதிய தொழில்நுட்பம் வரும்போது, காலவிரயம், பொருட்செலவு வெகுவாக குறையும். அதற்காகவே, 'ஸ்டார்ட் அப்' வருவது அதிகரித்துள்ளது. தங்கள் சிறப்பு தன்மையை, திறமையை, ஆவணமாக மாற்றுவதையே 'ஸ்டார்ட் அப்' என்கிறோம். இளைஞர்கள், மிக தெளிவாக புராஜக்ட் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு 'பேட்ஜ்' உற்பத்தியையும், மீண்டும் முதலில் இருந்தே துவங்குகிறோம். இதை, முழுவதும் டிஜிட்டல் ஆக்கிவிட்டால், உற்பத்தியை எளிதாக்கலாம். புத்தொழில் மாநாட்டின் மூலம், புதிய மாற்றத்துக்கு தயாராக காத்திருப்போருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். சி.ஆர்.எம்., (வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) தொழில்நுட்பம் பெரிய நிறுவனங்களில் அறிமுகமாகியுள்ளது; இது, அனைவருக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.
சரியான முதலீட்டாளர் கிடைப்பார்!
- அருள்செல்வம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, 'நிப்ட்-டீ - அடல் இன்குபேஷன் மையம், திருப்பூர்.
'அடல் இன்குபேஷன்' மையம், புத்தாக்க கண்டுபிடிப்புகளை, நடைமுறைப்படுத்த தேவையான வழிகாட்டுதல் வழங்கி ஊக்குவிக்கிறது. கோவை புத்தொழில் மாநாட்டில், பல்வேறு அமைச்சகங்களும் கண்காட்சியை அமைக்கின்றன. 'அடல் இன்குபேஷன்' கிளப், 'ஸ்டார்ட் அப்' கிளப்களும் பங்கேற்கின்றன. புதிய கண்டுபிடிப்பாளர் மட்டுமின்றி, முதலீட்டாளரும் வருகின்றனர். புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர், அதை செயல்படுத்த நிதி ஆதாரம் இல்லாமல், காத்திருக்கலாம். அதுபோன்ற நபருக்கு, முதலீட்டாளர் கிடைப்பார். சந்தைப்படுத்தி பிரபலப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும். கோவையில் நடக்கும் புத்தொழில் மாநாட்டுக்கு வரும் முதலீட்டாளரால், புதிய தொழில் உருவாகும். கண்காட்சியாக நடந்த நிலைமாறி, முற்றிலும் மாறுபட்ட மாநாடாக நடத்தப்படுகிறது. கோவையில் நடக்கும் மாநாடு ஒரு அரிய வாய்ப்பு; தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.