/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறுமையிலும் வீழாத சுதந்திர வேட்கை
/
வறுமையிலும் வீழாத சுதந்திர வேட்கை
ADDED : அக் 03, 2025 10:01 PM

- நமது நிருபர் -
பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த நம் நாட்டின் சுதந்திரத்துக்காக, தியாகம் செய்தோர் எண்ணற்றோர். நாட்டின் ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திலும் தேச விடுதலைக்காக ரத்தம் சிந்தி வாழ்ந்து, மறைந்த தியாகிகள் இருந்திக்கின்றனர்.'நம் நாடு வளமை பெற வேண்டும்' என்பதற்காக, வறுமையிலும் தேச விடுதலையில் தங்களை அர்ப்பணித்தோர் ஏராளம். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவரான, திருப்பூர் குமரனின் பிறந்த நாள் இன்று.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து, தலைச்சுமையாக தான் நெய்த துணிகளை நகரத்துக்கு சுமந்து சென்று விற்பனை செய்து, சம்பாதிப்பது தான் அவரது தொழில். போதிய வருமானம் இல்லாததால் திருப்பூருகு இடம் பெயர்ந்து பஞ்சு கடையில் கணக்கு எழுதும் பணியில் சேர்ந்தார்.
சிறு வயது முதலே காந்தியின் போதனைகளை பின்பற்றிய அவர், திருப்பூரில் 'தேசபந்து இளைஞர் மையம்' ஏற்படுத்தி, தேச பக்தர்களை ஒருங்கிணைத்தார்; தேசிய சுதேசி சிந்தனைகளை ஆழமாக விதைத்தார். 'அவரது வீரமிக்க, வீரியமிக்க சுதந்திர வேட்கை, 'அவரை தீர்த்தக்கட்ட வேண்டும் என்ற வெறியை பிரிட்டிஷ் போலீசாருக்கு ஏற்படுத்தியது' என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
கடந்த, 1932ல், திருப்பூரில் நடந்த காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க ஊர்வலத்தில், தேசிய கொடி ஏந்தி, இளைஞர்களை ஒன்று திரட்டி, ஊர்வலத்தில் பங்கேற்ற குமரனை, வெறிகொண்டு தாக்கியது பிரிட்டிஷ் போலீஸ். ரத்தம் கொட்ட தரையில் விழுந்தவரை பூட்ஸ் காலால் உதைத்து துவம்சம் செய்தனர் என்பதும் வரலாற்றுப்பதிவு. இத்தனை வேதனையிலும், தேசிய கொடியை மட்டும் கீழே விடாமல் உயர்த்தி பிடித்த அவரின் வீரமும் , தீரமும் தான், இன்றளவும் வரலாற்றில் பேசு பொருளாக இருந்து வருகிறது.
கடந்த, 1904 அக்., 4ம் தேதி பிறந்த குமரன், 1932 ஜன., 11ல் மறைந்தார். அவர் மண்ணில் வாழ்ந்தது, வெறும், 28 ஆண்டுகள்.