/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு கிடைக்குமென நம்பிக்கை: கலெக்டர் ஆபீசில் மக்கள் கூடுவது வாடிக்கை!
/
தீர்வு கிடைக்குமென நம்பிக்கை: கலெக்டர் ஆபீசில் மக்கள் கூடுவது வாடிக்கை!
தீர்வு கிடைக்குமென நம்பிக்கை: கலெக்டர் ஆபீசில் மக்கள் கூடுவது வாடிக்கை!
தீர்வு கிடைக்குமென நம்பிக்கை: கலெக்டர் ஆபீசில் மக்கள் கூடுவது வாடிக்கை!
ADDED : நவ 12, 2024 06:25 AM

திருப்பூர்; கலெக்டரின் கவனத்துக்கு கொண்டுசென்றால், தங்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர், காத்திருந்து மனு அளிக்கின்றனர். நேற்றைய கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாம்சாந்தகுமார் ஆகியோர், பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
உரிய தீர்வு காண்பதற்காக துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, மனு அளித்தனர். நேற்றைய முகாமில் மொத்தம் 482 மனுக்கள் பெறப்பட்டன.
உதவி இழுத்தடிப்பு
மாற்றுத்திறனாளி கண்ணம்மாள் உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பது குறித்து அளித்த மனு: தாராபுரம் தாலுகா, தளவாய்பட்டணத்தில் வசிக்கிறேன். கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளியான நான், உதவித்தொகை கேட்டு, கடந்த ஓராண்டாக விண்ணப்பித்தும் இதுவரை வழங்கவில்லை.
ஆதரவுக்கு யாருமின்றி தவிக்கும் எனக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தளவாய் பட்டணத்தை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளியான ராஜாசிங், பட்ட மேற்படிப்பு படித்துள்ள தனது மனைவிக்கு அரசு பணி வழங்கக்கோரி மனு அளித்தார்.
ஏமாற்றி திருமணம்
திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், கை குழந்தையுடன் அளித்த மனு: ஆன்லைன் திருமண செயலி மூலம் ஏற்பட்ட தொடர்பில், கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தேன்.
தன்னை டாக்டர் என பொய் சொல்லி, என்னைப் போல் பல பெண்களை ஏமாற்றி, பணம் பறித்தது தெரியவந்தது. நான் கர்ப்பிணியாக இருந்த போது, கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். என்னை போல் வேறு பெண்கள் பாதிக்கப்படாமல் தடுக்கவேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பட்டா வேண்டும்
இரும்புக்கொல்லர் சமூக நல சங்க பிரதிநிதிகள் அளித்த மனு: அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோடும் நான்கு விதிகளிலும், திருவிழாவை காணவருவோர் தங்குவதற்காக மடங்கள் உள்ளன.
மேற்கு ரத வீதியில் இரும்புக்கொல்லர் சமூக மடம் உள்ளது. அவிநாசி கோவில் தல வரலாற்று புத்தகத்திலும் எங்கள் சமூக மடம் இடம்பெற்றுள்ளது. எனவே, அரசு நத்தம் பதிவேடுகளில், இரும்புக்கொல்லர் மடம் என பதிவு செய்து, பட்டா வழங்கவேண்டும்.
அங்கன்வாடி மோசம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இப்பள்ளி சுற்றுச்சுவர் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சுவர் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தான சூழல் நீடிக்கிறது. சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யுங்க...
அவிநாசி ஒன்றியக்குழு இந்திய கம்யூ., செயலாளர் முத்துசாமி அளித்த மனு: ராமநாதபுரத்தில், வண்டிப்பாதை அரசு புறம்போக்கு நிலத்தில், ராமாத்தாள், தங்கமணி, பாப்பாத்தி, குப்பியம்மாள் ஆகிய நான்கு குடும்பத்தினர் குடிசை அமைத்து வசிக்கின்றனர்.
அருகாமையில் உள்ள நத்தம் அரசு புறம்போக்கு நிலத்தில், 1996ல், சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்கள், வேறு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு குடிபெயர்ந்துவிட்டனர்.
எனவே எட்டு பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்து, உண்மையான பயனாளிகளுக்கு பட்டா வழங்கலாம் என தெரிவித்த அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1996ல் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, அருகாமையில் குடிசை அமைத்து வாழ்ந்துவரும் நான்கு குடும்பங்களுக்கு அதேயிடத்தில், பட்டா வழங்க வேண்டும்.