/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீடித்த வருவாய் கொடுக்கும் 'டிராகன்' பழ சாகுபடி தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
நீடித்த வருவாய் கொடுக்கும் 'டிராகன்' பழ சாகுபடி தோட்டக்கலைத்துறை அழைப்பு
நீடித்த வருவாய் கொடுக்கும் 'டிராகன்' பழ சாகுபடி தோட்டக்கலைத்துறை அழைப்பு
நீடித்த வருவாய் கொடுக்கும் 'டிராகன்' பழ சாகுபடி தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜன 05, 2025 02:25 AM

திருப்பூர்: தோட்டக்கலை இயக்கத்தின் வாயிலாக, விவசாயிகள் நீடித்த வருவாய் பெறும் வகையில், 'டிராகன்' பழம் சாகுபடி செய்ய, மானியம் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தின் போது, விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், சிறிய கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்மூலம், வட்டார அளவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், மூலனுார் வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்களை, உதவி இயக்குனர் (பொ) வினோத் தலைமையிலான அலுவலர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
காட்சிக்கு வைத்திருந்த, 'டிராகன்' பழம் தான், அனைவரையும் கவர்ந்தது.தேசிய தோட்டக்கலை இயக்கத்தில், 'டிராகன்' பழம் சாகுபடி செய்ய, எக்டருக்கு, 96 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. கள்ளிச்செடி வகையை சேர்ந்த 'டிராகன்' பழச்செடி, தெலுங்கானா, ஆந்திராவில் இருந்து, தலா,85 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
உயரமான பந்தல் அமைத்து, செடிகள் வளர்த்து, எட்டு ஆண்டுகள் வரை, பழம் பறித்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். எக்டருக்கு, ஆறு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும்; அதில், 96 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கிறது. செடி வளர்ந்த, 1.50 ஆண்டுகளுக்கு பிறகு, காய் பிடிக்க துவங்கும்.
முதலில் சிறிய அளவிலான காய்களாக இருக்கும்; இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய அளவிலான காய்கள் காய்க்கும்; கிலோ, 300 முதல், 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக, ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை, தொடர் வருமானம் பெறலாம். மூலனுார் பகுதியில், முதன்முதலாக, 'டிராகன்' பழம் சாகுபடி செய்து, பழம் விற்பனையும் துவங்கியிருக்கிறது.
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''விவசாயிகள் நீடித்த வருவாய் பெறும் வகையில், 'டிராகன்' பழம் சாகுபடி செய்யலாம். மூலனுார் வட்டாரத்தில், ராஜ்குமார் என்ற விவசாயி வெற்றிகரமாக செய்துள்ளார். ஆர்வமுள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, மானிய உதவியுடன், 'டிராகன்' பழம் சாகுபடி செய்யலாம்,'' என்றனர்.

