/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் பழச்செடி தொகுப்பு வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
மானிய விலையில் பழச்செடி தொகுப்பு வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
மானிய விலையில் பழச்செடி தொகுப்பு வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
மானிய விலையில் பழச்செடி தொகுப்பு வினியோகம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : நவ 24, 2025 06:04 AM

உடுமலை: மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை சார்பில், பழச்செடி தொகுப்புகள் மானிய விலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாசங்கரி கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை வாயிலாக, பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், பழச்செடி தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து தன்னிறைவு மேம்பாடு அடைய பழச்செடி தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி மற்றும் சீதா ஆகிய 5 பழ செடிகள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.
* சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் புற்றுநோய் ஏற்படாது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவடையச் செய்யும். செடிகளை நடும்போது 60x60x60 செ.மீ. நீளம், அகலம், உயரம் அளவுள்ள குழி எடுத்து அதனுள் சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு மற்றும் தொழுஉரமிட்டு சப்போட்டா செடியை நடவு செய்ய வேண்டும்.
*கொய்யாப்பழம், கொய்யா இலைகள் இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. குழி எடுத்து, வேப்பம் புண்ணாக்கு, தொழுஉரம் ஆகியவற்றை குழிகளில் பாதி அளவுக்கு நிரப்பி குழிக்கு மத்தியில் செடிகளை மேல் மண் கொண்டு நடவு செய்ய வேண்டும்.
* எலுமிச்சை அதன் சுவைக்காகவும், அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது. சிறுநீரக கற்களை தடுக்கின்றன. எலுமிச்சை சாறு சிறந்த புத்துணர்ச்சி தரும் பானமாகும். 30x30x30 செ.மீ. நீளம், அகல, உயரம் அளவுள்ள குழிகளை எடுத்து எலுமிச்சை நாற்றுக்களை குழிகளின் நடுவில் நடவு செய்து நீர் பாய்ச்ச வேண்டும். குழிகளில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
* பப்பாளி பழம், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்திக்கும், ஞாபக சக்தி உண்டு பண்ணவும் சிறந்தது. அடிக்கடி பப்பாளி உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழி எடுத்து அதனுள் மண் மற்றும் தொழுஉரங்களை நிரப்பி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். செடிகளைச் சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
* சீதாப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பல நன்மைகள் உள்ளன. 45x45x45 செ.மீ., அளவுள்ள குழி எடுத்து, வேப்பம் புண்ணாக்கு மற்றும் தொழு உரங்களை குழிகளில் நிரப்பி செடிகளை நடவு செய்ய வேண்டும்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு ஆகிய கிராமங்களுக்கு, 400 பழச்செடி தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
ஐந்து பழச் செடிகள் கொண்ட ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.200 ஆகும். தொகுப்பு ஒன்றுக்கு, 75 சதவீதம் மானியத்தில், பயனாளிகள் 25 சதவீதம் பங்கு தொகையான ரூ.50 மட்டும் செலுத்தி, 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.

