/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம ஊராட்சிகளில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி! பணியாளர் பற்றாக்குறையால் திணறும் ஊராட்சிகள்
/
கிராம ஊராட்சிகளில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி! பணியாளர் பற்றாக்குறையால் திணறும் ஊராட்சிகள்
கிராம ஊராட்சிகளில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி! பணியாளர் பற்றாக்குறையால் திணறும் ஊராட்சிகள்
கிராம ஊராட்சிகளில் 'ஹாட் ஸ்பாட்' பகுதி! பணியாளர் பற்றாக்குறையால் திணறும் ஊராட்சிகள்
ADDED : ஜூலை 02, 2025 11:50 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளை பொறுத்தவரை தீர்க்க முடியாத குப்பை மேலாண்மை என்பது, பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், வீடு மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. '150 வீடுகளுக்கு ஒரு துாய்மை காவலர்' என, அரசு அறிவித்துள்ள நிலையில், வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை.
கிராம ஊராட்சிகளில், வீடு, வீடாக தினசரி குப்பை சேகரிக்கும் பணி, நுாறு சதவீதம் நடப்பதில்லை என்ற நிலையில், மக்கள் சாலையோரம், குளம், குட்டை உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் குறிப்பிட்ட சில இடங்கள், எந்நேரமும் குப்பை குவியல் நிறைந்தே இருக்கும். அத்தகைய இடங்களை, 'ஹாட் ஸ்பாட்' என, வகைப்படுத்தி, அந்த இடங்களில் குப்பைகளை அகற்ற முக்கியத்துவம் வழங்க வேண்டும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், பொக்லைன் மற்றும் டிராக்டர் உதவியுடன் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்படுகின்றன.அதே நேரம், வார்டு, வீதி வாரியாக வீடு தோறும் சென்று குப்பை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளும் துாய்மைப்பணியாளர்கள் அதை ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் போனில் போட்டோ எடுத்து, மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஏற்கனவே, கிராம ஊராட்சிகளில், 80 சதவீதம் அளவுக்கு துாய்மைப் பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், 'குப்பையில்லா ஊராட்சி' என்ற நிலையை எட்டுவதில் சிரமம் உள்ளது.
வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஓரிருவரை துாய்மைப்பணியில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தோம்; தற்போது, ஜி.பி.எஸ்., வாயிலாக துாய்மைப் பணியாளர்கள் வருகை, உறுதி செய்யப்படுவதால், நுாறு நாள் திட்ட நிதியை துாய்மைப்பணிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கிராம ஊராட்சிகளில் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காலியாக உள்ள துாய்மைப்பணியாளர் பணிடங்களை நிரப்புவதுடன், குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட துாய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினால் மட்டுமே, துாய்மைப் பணியில் தன்னிறைவு காண முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.