/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு
/
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு
ADDED : ஜன 30, 2025 11:51 PM

திருப்பூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, வீடு இல்லாதவர்களுக்கு, வீடு ஒதுக்கீடு செய்து வழங்கிவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் பங்களிப்பு தொகை பெற்று, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
திருப்பூரில், நெருப்பெரிச்சல் பாரதி நகரில் 384 வீடுகள்; பெருந்தொழுவு காமராஜ் நகரில், 192; அறிவொளி நகரில், 288 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள. பங்களிப்பு தொகை செலுத்திய பயனாளிகளுக்கு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பங்களிப்பு தொகை செலுத்திய பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் தலைமை வகித்தார். காலியாக உள்ள வீட்டின் எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் குடுவையில் போடப்பட்டு குலுக்கல் நடத்தப்பட்டது.
பயனாளிகள் எடுத்துக்கொடுத்த சீட்டுக்களில் இருந்த எண் அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரதிநகரில், 49; காமராஜ் நகரில், 12; அறிவொளி நகரில் ஒன்பது பேர், வீடு ஒதுக்கீடு பெற்றனர். 'பாரதி நகர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கு பங்களிப்பு தொகை செலுத்தியவர்களின் மூன்று பயனாளிகள் பங்கேற்கவில்லை; அவர்களுக்கு வேறொரு நாளில் குலுக்கல் நடத்தி, வீடு ஒதுக்கீடு செய்யப்படும். பாரதி நகர், அறிவொளி நகர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது' என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.

