/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு வீடாக சென்று பட்டியல் சரிபார்ப்பு
/
வீடு வீடாக சென்று பட்டியல் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 20, 2025 01:54 AM

திருப்பூர் : வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், சிறுபான்மையின வாக்காளர் ஆதரவையும் திரட்ட வேண்டுமென, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பான, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளர் தாமோதரன், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் பணிகளை விளக்கி பேசினர். எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,''பொது செயலாளரின் திருப்பூர் மாவட்ட மக்கள் சந்திப்பு பயணம், விரைவில் நடக்க உள்ளது. நிர்வாகிகள் தயாராக வேண்டும்.
ஒவ்வொரு வார்டு, பூத் கமிட்டியில் இருந்து திரளான மக்களை பங்கேற்க செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடு வீடாக சென்று மேற்கொள்ள வேண்டும்.
தகுதியற்ற மற்றும் இடம்பெயர்ந்த பெயர்களை நீக்க பரிந்துரைக்க வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டணி இருப்பதால், சிறுபான்மையினர் ஓட்டளிக்க மாட்டார்கள் என்று தீர்மானிக்க வேண்டாம்; கட்சி ஆதரவாளராக உள்ள சிறுபான்மையினர் குடும்பங்களை கண்டறிந்து, ஆதரவு திரட்ட வேண்டும்,'' என்றார்.
இணை செயலாளர் சங்கீதா, பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கேசவன், முத்து, கருணாகரன், தினேஷ்குமார் உட்பட, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.