ADDED : ஆக 21, 2025 11:38 PM

திருப்பூர்; ஸ்ரீமத் பகவத்கீதை தொடர் சொற்பொழிவு மூன்றாம் ஆண்டு துவக்க விழா, அவிநாசி பழனியப்பா பள்ளி வளாகத்தில் நடந்தது. சொற்பொழிவில் இடம்பெற்ற கருத்துகள்:
ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடத்தைச் சேர்ந்த ஸ்வாமி ததேவானந்த ஸரஸ்வதி:
மனிதப்பிறவியைப் பயன்படுத்தி ஒருவன் அடைய வேண்டிய மிக உயர்ந்த நிலை ஆத்ம ஞானமாகும். பகவான் கிருஷ்ணர், ஆத்ம ஞானத்தை பகவத்கீதையில், அர்ஜூனனுக்குத் தெளிவாக உபதேசித்துள்ளார். ஆத்மஞானத்தை சம்பிரதாயத்தில் வந்த குரு மூலம்தான் பெற முடியும். ஞானத்தை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஈரோடு ஆர்ஷ வித்யா வ்ருஷத்தை சேர்ந்த ஸ்வாமி நித்யமுக்தானந்த ஸரஸ்வதி:
நம் ஒவ்வொருவர் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு, கீதையில் கூறப்பட்டுள்ளது. இது உபநிஷத்தின் சாரமாகும். கீதையைப் படிப்பதால் மன அமைதி, சந்தோஷம், நிம்மதி கிடைக்கும்; மனத்துயரம் நீக்கும். பகவத்கீதையை சம்பிரதாயத்தில் வந்த குருவிடம் இருந்து தொடர்ச்சியாக சிரத்தையுடன் கேட்க வேண்டும்.
ஸ்ரீஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி:ஆத்ம ஞானத்தை சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி சிஷ்யர்களை உருவாக்கியுள்ளார். அவரது நேரடி சீடர் சுவாமி சுதீரானந்த ஸரஸ்வதி, வாரந்தோறும் திருப்பூர் வந்து வகுப்புகள் நடத்த உள்ளார். அனைவரும், இவ்வகுப்புகளில் தவறாது பங்கேற்க வேண்டும்.