/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யானை வாங்கியாச்சு... அங்குசம் வாங்கலை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் நிலை: கூடுதல் டாக்டர் - செவிலியர் நியமித்தால் தேவலை
/
யானை வாங்கியாச்சு... அங்குசம் வாங்கலை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் நிலை: கூடுதல் டாக்டர் - செவிலியர் நியமித்தால் தேவலை
யானை வாங்கியாச்சு... அங்குசம் வாங்கலை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் நிலை: கூடுதல் டாக்டர் - செவிலியர் நியமித்தால் தேவலை
யானை வாங்கியாச்சு... அங்குசம் வாங்கலை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையின் நிலை: கூடுதல் டாக்டர் - செவிலியர் நியமித்தால் தேவலை
ADDED : நவ 18, 2025 04:49 AM

திருப்பூர்: 'யானையே வாங்கியாச்சு... அங்குசம் தான் வாங்கவில்லை,' என்ற கதையாக, 15 வேலம்பாளையத்தில் மூன்று தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், போதியளவு டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால், உயர் சிகிச்சை எட்டாக்கனியாக உள்ளது.
தேசிய மற்றும் மாநில நகர்ப்புற சுகாதார திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஆகிய நிதியில், 48.68 கோடி மதிப்பில், திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு, ஆக. 11ல் திறக்கப்பட்டது. ஆண், பெண், குழந்தைகள் தனிப்பிரிவு, பொது மருத்துவம், விபத்து, மகப்பேறு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகள் மூன்று தளங்களில் செயல்படுகிறது.
தினமும், புறநோயாளிகளாக, 400 - 500 பேர் வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில், 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் மருத்துவமனை நாடி வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உள்நோயாளிகள், 80 - 90 பேர் தங்கி சிகிச்சை பெற வசதிகள் உள்ளது. எக்ஸ்ரே, அதிநவீன இ.சி.ஜி., எக்கோ, அறுவை சிகிச்சைக்கு நான்கு பிரத்யேக அறைகள், ஆப்ரேஷன் தியேட்டர் உபகரணங்கள், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், எதிர்கொள்ள, 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது.
உயர் சிகிச்சைகேள்விக்குறி மருத்துவமனை, 63 ஆயிரத்து, 226 சதுர அடி பரப்பில் விரிவான வசதிகளுடன் உள்ளது. ஆனால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 20ஐ கூட நெருங்கவில்லை. போதிய மருத்துவ வசதிகள், மருத்துவ கருவிகள் இருந்தும், டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் மற்றும் உதவியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வருவோருக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைகளை முடித்து, உயர்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலையே உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மாலை நேர ஓ.பி., (புறநோயாளிகள் மருத்துவ பரிசோதனை) இல்லை. ஆனால், இங்கு, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நேர ஓ.பி. செயல்படுகிறது. 24 மணி நேரமும் உயிர்காக்கும் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இரண்டு டாக்டர், மூன்று செவிலியர் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
கூடுதல் டாக்டர் நியமிக்கணும்!
மருத்துவமனை திறந்து, மூன்று மாதமான நிலையில், மருத்துவப்பணிகள் இயக்குனரகம் தற்காலிகமாக திறப்பு விழா நாளில், வேறு மருத்துவமனையில் இருந்து தற்காலிகமாக வழங்கிய, 10 - 12 டாக்டர்களே பணியில் உள்ளனர்.
மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள இவர்கள், தினமும், 15 வேலம்பாளையம் மருத்துவமனைக்கு வந்து பணிபுரிகின்றனர்.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், இயன்றவரை அவசர சிகிச்சை பிரிவில் இரவு மற்றும் பகலில் இரண்டு டாக்டர் பணியாற்றுகின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே, வடக்கு பகுதியில், 15 வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது.
ஆனால், இங்கு 'ஸ்பெஷாலிட்டி' டாக்டர்கள் இல்லாமல், ஆரம்ப கட்ட சிகிச்சைகளை அதுவும் குறைந்த மருத்துவர்களை கொண்டு மேற்கொள்வதால், மருத்துவமனை திறந்தும், நோயாளிகளுக்கு முழுமையாக பயன்படாத நிலையே உள்ளது.
மாவட்ட மருத்துவப்பணிகள் தரப்பில் இருந்தும், அரசு டாக்டர்கள் முறையீட்டும், கடிதங்கள் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்கள் கடந்தும், கூடுதல் டாக்டர் நியமனத்துக்கான அறிவிப்பு இல்லை.
இவ்வளவு பெரிய மருத்துவமனையில், விரிவுபடுத்தப்பட்ட மருந்தகம் இல்லை. இதனால், போதிய அளவிலான மருந்துகளை இருப்பு வைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, அத்தியாவசிய, அவசர தேவையாக உடனடியாக மருந்தகத்தை விரிவுபடுத்தி அதற்கேற்ப ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
எக்ஸ்ரே, அதிநவீன இ.சி.ஜி., எக்கோ, அறுவை சிகிச்சைக்கு நான்கு பிரத்யேக அறைகள், ஆப்ரேஷன் தியேட்டர் உபகரணங்கள், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், எதிர்கொள்ள, 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது

