/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து...
/
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து...
ADDED : ஜன 16, 2024 02:44 AM
அந்த நாளின் மாலை விடைபெற இருள்சூழ துவங்கியிருந்த நேரம். பரபரப்பு தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தார் அந்த, 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி. எங்கிருந்தோ வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில், அரிவாளால் சரமாரியாக தாக்கி, கொடூரமாக கொலை செய்து தப்பியது.
இதனை பார்த்த பொதுமக்கள், சத்தம் போட்டாவறே ஓடத்துவங்கினர். தகவல் கிடைத்தவுடன் தெற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வழக்கமான சம்பிரதாயமாக போட்டோ எடுத்து விட்டு, தடயம் ஏதாவது கிடைக்கிறதா போலீசார் விசாரித்தனர்.
ஆனால், போலீசாருடன், சாதாரண உடையில் இருந்த அந்த இளைஞரின் துருதுருவென்ற கண்கள் எதையோ தேடி கொண்டிருந்தன. அருகிலிருந்த வீட்டில் இருந்த 'சிசிடிவி'யின், காட்சிகளை பலமுறை உற்று பார்த்து கொண்டிருந்த அந்த இளைஞரின் மூளையில் ஒரு 'பொறி' பறந்தது.
அடுத்த சில நிமிடங்களில், அதே பகுதியில் 100 மீட்டர் துாரத்தில் இருந்த பொது கழிப்பிடத்துக்கு செல்கிறார். அங்கிருந்தவரிடம் விசாரித்தவுடன், கிடைத்த தகவலை உயரதிகாரிகளுக்கு சொல்கிறார். அடுத்த நொடியே, போலீஸ் படை கொலையானவரின் வீட்டுக்கு செல்கிறது. அதன்பின் நடந்த தொடர் விசாரணையில் குற்றவாளிகள் சிக்கினர்.
புலன் விசாரணையில் 'சீறிப்பாய்ந்த' அந்த இளைஞர் விவேக்குமார். திருப்பூர் தெற்கு போலீசில், நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ., யாக பணிபுரிகிறார்.
ஒரு சிலகொலை, கொள்ளை, கடத்தல் போன்றவை நடக்கும் போது, அதில் தொடர்புடையவர்களை பிடிக்கும் வரை போலீசாருக்கு நிம்மதி இருக்காது. சில நேரங்களில் வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்வது, இறந்தவர் யார் என்பது கண்டறிவதில் பெரும் சவாலை ஏற்படுத்தி விடும்.
அவ்வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் பகுதியில், கொலை, கொள்ளை போன்ற எந்தவொரு சம்பவங்கள் நடந்தாலும், அங்கு அதிகாரிகளுக்கு உதவியாக புலன் விசாரணை மேற்கொள்ள அழைக்கும் முதல் நபராக, விவேக்குமார்
உள்ளார்.
அதுமட்டுமின்றி, திருப்பூருக்கு வரக்கூடிய கமிஷனர்கள் மத்தியில் தனக்கான ஒரு நல்ல இடத்தை பெற்று, வழக்குகளில் புலன் விசாரணை செய்வதில் சிறப்பாக பணியாற்றுகிறார் என்ற நற்பெயரையும் பெற்றுள்ளார்.
கடந்த, 2016ல், எஸ்.ஐ.,யாக தனது பணியை துவக்கிய விவேக்குமார், கொலை, கொள்ளை, கடத்தல் என, பல வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் துப்பு துலங்க தற்போது வரை உதவியாக உள்ளார்.
கடந்த, மூன்று ஆண்டுகளில், 35 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் விவேக்குமார், ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று சிறப்பாக பணியாற்றியதற்காக சான்றிதழ் மற்றும் கமிஷனரிடம் ரிவார்டும் தொடர்ச்சியாக பெற்று வருகிறார்.
அதிகாரிகளே துணை!
எஸ்.ஐ., விவேக்குமார் கூறியதாவது:
போலீஸ் பயிற்சி அகாடமியில், பயிற்சி முடிந்து சேலம், சென்னை, திருப்பூர் பணியாற்றிய போது, கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய சிறப்பாக புலன் விசாரணை செய்ததற்காக பலமுறை அதிகாரிகள் பாராட்டி, வெகுமதி வழங்கி உள்ளனர்.
தற்போது வரை உயரதிகாரிகள் ஊக்கமும், சக போலீசாரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம். ஒவ்வொரு சம்பவ இடத்திலும் விசாரணைக்கு சென்றால், இறந்து போனவரின் ஆன்மா சாந்தி அடைய சில நிமிடங்கள் வேண்டி கொள்வேன்.
அதன்பின், விசாரணையை துவக்கும் போது, அந்த ஆன்மா ஏதாவது ஒரு சமிக்ஞை காட்டுவது போல், எனக்கு சில தடயங்கள் கிடைத்து விடும். அதன்பின், விசாரிக்கும் போது, வழக்கில் தொடர்புடையவர்களை எளிதாக நெருங்க முடிகிறது. எஸ்.ஐ., பயிற்சியின் போது, உயரதிகாரி ஒருவர், அவரின் போலீஸ் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்தார். தற்போது வரை, அதனை பின்பற்றி வருகிறேன்.
இவ்வாறு, அவர்
கூறினார்.