/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பதிவு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பதிவு
ADDED : நவ 15, 2025 01:09 AM

திருப்பூர்: மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்காக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான (யு.டி.ஐ.டி.,) மருத்துவ பரிசோதனை முகாம், பெரிச்சிபாளையத்திலுள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடத்தப்பட்டுவந்தது.
அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், முகாமை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலேயே நடத்தவேண்டும்; அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முகாம் நடத்தவேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கோரிக்கைவைத்தனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை முகாம், நேற்று முதல், மீண்டும் கலெக்டர் அலுவலக அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்றைய முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 53 பேர் பங்கேற்றனர். கண், காது மூக்கு தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, சான்று வழங்கினர்.
மருத்துவர்கள் அளித்த சான்று மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மத்திய அரசின் யு.டி.ஐ.டி., தளத்தில், ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்காக பதிவு செய்யப்பட்டது. முகாமில், உரிய ஆவணங்களுடன் பங்கேற்ற, 47 மாற்றுத்திறனாளிகளுக்கு, அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது.

