/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சும்மா கிடக்கும் அம்மா பூங்காக்கள்
/
சும்மா கிடக்கும் அம்மா பூங்காக்கள்
ADDED : டிச 26, 2024 11:51 PM

திருப்பூர்; ஊரகப்பகுதிகளில், மக்களின் பொழுது போக்கும் பூங்கா கட்டமைப்பு பெரும்பாலான இடங்களில் இல்லை.வார விடுமுறை, தேர்வு விடுமுறை நாட்களில் குழந்தைகளின் பொழுது போக்கு விளையாட்டு தான். மைதானங்களிலும், பூங்காக்களிலும் குழந்தைகள் விளையாடுவதை பார்க்க முடியும்.
தற்போதைய சூழலில், ஊரகப் பகுதிகளில் மைதானம் மற்றும் பூங்காக்கள் இல்லை. கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டாலும் அவை குழந்தைகள் விளையாடுவதற்குரிய கட்டமைப்புடன் இல்லை.
வெறும் நடைபயிற்சி மேற்கொள்ள, ஓய்வெடுத்து செல்லும் வகையில் தான் உள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சில ஊராட்சிகளில், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம், அதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி கிடக்கிறது. அவிநாசி கருமாபாளையம் பகுதியில் உள்ள அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள், களவு போயிருக்கிறது. ''பூங்காவை, காலை, மாலை மட்டும் திறந்து வைக்கிறோம்; உள்ளூரில் உள்ள குழந்தைகள் விளையாடுகின்றனர். உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உதிரி பாகங்கள் வேண்டி, ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்'' என்கிறார் ஊராட்சி தலைவர் பூங்கொடி.பல்வேறு ஊராட்சிகளில், கடந்த தி.மு.க., ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் கூட தற்போது, பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கின்றன.
இதனால், ஊரக பகுதிகளில் உள்ள சிறுவர்கள் தரைதட்டி கிடக்கும் குளம், குட்டைகளிலும், வானம் பார்த்துள்ள விவசாய நிலங்களையும் தான், விளையாட்டு திடலாக பயன்படுத்தும் நிலையை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் பூங்கா அமைப்பதற்கான இடம் இருக்கிறது; ஆனால், பூங்கா அமைக்க, அதை பராமரிக்க நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால், அதைப்பற்றி ஊராட்சி நிர்வாகங்களும் கவலைப்படுவதில்லை.