/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுதி வசதி இருந்தால் தொழிலாளர் வருகை உயரும்
/
விடுதி வசதி இருந்தால் தொழிலாளர் வருகை உயரும்
ADDED : ஏப் 26, 2025 11:33 PM
திருப்பூரில், பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி இருந்தால், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய வெளி மாவட்ட, வெளி மாநில பெண்கள் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் தொழில்துறையினர்.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட, எட்டு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வெளிமாவட்ட மக்கள், நிரந்தரமாக திருப்பூர் வாசிகளாக மாறிவிட்டனர். நம் நாட்டில் உள்ள, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெளி மாநில பெண் தொழிலாளர் உட்பட, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி இல்லை.
விடுதி வசதி இல்லை
பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள், நுாற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்களை, உணவு, இருப்பிட வசதியுடன் தங்க வைத்துள்ளன. மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்; பெண் தொழிலாளருக்கு பாதுகாப்பான தங்குமிட வசதியில்லை.
திருப்பூரை பொறுத்தவரை, 'சிப்காட்' திட்டத்தில், 500 பெண்கள் மற்றும் 250 ஆண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன; இன்றளவில், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில், 50 பெண்கள் தங்கும் விடுதி மட்டும் இயங்கி வருகிறது.
திருப்பூர் வரத் தயக்கம்
திருப்பூர் பின்னலாடை தொழிலில், பின்னலாடை உற்பத்தி, 'நிட்டிங்', சாய ஆலைகள், 'பிரின்டிங்', 'காம்பாக்டிங்', 'எம்ப்ராய்டரிங்', 'எலாஸ்டிக்' தயாரிப்பு என, பல்வேறு தொழில் பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பான தங்குமிட வசதியில்லாததால், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்களும், வெளிமாநில தொழிலாளரும் திருப்பூர் வர தயங்குகின்றனர்.
இதுதான் யோசனை
திருப்பூர் பின்னலாடைத் தொழில மேலும் வளர்ச்சி பெற்றால், ஆடை உற்பத்தி பிரிவுகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிக்கும். அதற்காகவே, உற்பத்தி பிரிவுக்கும், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளை மட்டுமே எதிர்பார்க்காமல், 50 சதவீத மானிய உதவியுடன் தொழிலாளர் தங்குமிட வசதியை ஏற்படுத்தலாம் என, ஏற்றுமதி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.