/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தையை கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள்
/
சந்தையை கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள்
ADDED : ஜூலை 02, 2025 09:47 PM
உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. நுண் உரக்குடில், ஆடு வதைக்கூடம் என, சந்தை வளாகம் குறுகலாக மாறியுள்ளது. தற்போது சந்தையில், 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன. சந்தைக்கு, தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
தினசரி சந்தையில், விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கான, குடிநீர், கழிப்பறை, ரோடு என, எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புறநகர் ரோடுகளிலும், கழிவுகள் கொட்டப்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
சந்தையிலுள்ள ரோடுகளை ஆக்கிரமித்தும், தரையில் அமர்ந்து, வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளதால், மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், கடந்த, 2018ம் ஆண்டு, 6.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடைகள் கட்டுமான பணி இழுபறியாவதோடு, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில், ஆபத்தான பழைய கட்டடங்கள், கட்டட கழிவுகள் குவிப்பு என அவல நிலை உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலை வாரச்சந்தையில், கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு உரிய இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
வாரச்சந்தை அவலம்
உடுமலை ஒன்றியத்தில் வாளவாடி, குடிமங்கலத்தில் பூளவாடி, ராமசந்திராபுரம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் வாரச்சந்தைகள் செயல்படுகின்றன.
வாளவாடி வாரச்சந்தைக்கு இடவசதி இருந்தும், வளாகத்தை மேம்படுத்துவதற்கு ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், 'குடி'மகன்கள் கூடாரமாக மாறியுள்ளது. சந்தையின் மேற்கூரைகள் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. முள்செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.
ராமசந்திராபுரம் வாரச்சந்தை முழுமையாக திறந்தவெளிக் கழிப்பிடமாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் எந்த பலனும் இல்லை.
போடிபட்டி, பூலாங்கிணர், கணக்கம்பாளையம் பகுதிகளில் தற்காலிக வாரச்சந்தைகளும் செயல்படுகின்றன. அவற்றை மேம்படுத்தவும் ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.