/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் துாய்மைப்பணிகள் பாதிப்பு; பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு
/
அரசு பள்ளிகளில் துாய்மைப்பணிகள் பாதிப்பு; பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு
அரசு பள்ளிகளில் துாய்மைப்பணிகள் பாதிப்பு; பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு
அரசு பள்ளிகளில் துாய்மைப்பணிகள் பாதிப்பு; பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு
ADDED : செப் 18, 2024 08:40 PM
உடுமலை : உடுமலை வட்டார அரசுப்பள்ளி துாய்மை காவலர்களுக்கு, ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், பணிகள் பாதிக்கப்படுகிறது.
துாய்மை பாரத திட்டத்தின் கீழ், கிராமப்புற அரசு பள்ளிகளில், தலா ஒரு துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக, ஊதியம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
துவக்கப்பள்ளிகளில் உள்ள துாய்மை பணியாளருக்கு, 1,300 ரூபாய், நடுநிலைப்பள்ளிகளில் 2,500 ரூபாய் வீதம் வழங்கப் படுகிறது.
மூன்று மாதங்களாக, இப்பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே பிரச்னை தொடர்வதால், பள்ளிகளில் துாய்மைப்பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் துவக்கம், நடுநிலை என பள்ளி வாரியாக பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அங்குள்ள துாய்மைப்பணியாளருக்கும் குறைந்த ஊதியம்தான் வழங்கப்படுகிறது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
துாய்மைப்பணியாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் அரசு வழங்குகிறது. இதனால், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் கூடுதலாக ஊதியம் வழங்குகிறோம்.
அரசு வழங்கும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதால், துப்புரவு பணிகள் பல நேரங்களில் பாதிக்கப்படுகிறது. கழிப்பறைகளை ஒருமுறை மட்டுமே துாய்மைபடுத்தி விட்டு செல்கின்றனர்.
சில நேரங்களில் மாணவர்கள் அதிகமாக கழிப்பறையை பயன்படுத்தும்போது மறுமுறையும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் இப்பணியாளர்கள் வர மறுக்கின்றனர்.
குறைவாக வழங்கும் ஊதியம், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசு வழங்குகிறது.
இவ்வாறு தாமதப்படுத்துவதால் பள்ளியின் துாய்மை தான் பாதிக்கப்படுகிறது. தவிர, பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் அப்பணியாளர்களுக்கும், தாமதமாக மிகவும் குறைந்த அளவில் வழங்கப்படும் ஊதியம் பயனளிக்காது. மாநில அரசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.