ADDED : ஆக 21, 2026 05:30 PM
கழிவுகளை நான்காக பிரிக்கணும்
உடுமலை: உடுமலை நகராட்சியில், புதிய திடக்கழிவு மேலாண்மை விதி அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கழிவுகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 74 ஆயிரத்து, 528 பேர் வசித்து வருகின்றனர்; 17,526 வீடுகள், 1,038 வணிக நிறுவனங்கள் உள்ளன.
நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, ஏறத்தாழ, 28 டன் குப்பை சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்களிடம், குப்பை வரி வசூலிக்கப்படுகிறது.
நகராட்சியிலுள்ள, 230க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களால், வீடுகள், வணிக நிறுவனங்களில் நேரடியாக குப்பை சேகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து பெறப்பட்ட நிலையில், தற்போது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் கீழ், நான்கு வகையாகப் பிரித்து, வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரக்கழிவு, மக்கும் கழிவு ஒரு வகையாகவும், உலர் கழிவு அல்லது மக்காத கழிவு, சுகாதாரக்கழிவு மற்றும் வீட்டு அபாயகர கழிவாக வகைப்படுத்தப்பட்ட சிறப்புக் கவனிப்புக் கழிவு என நான்கு வகையாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமையலறை, சமைத்த மற்றும் சமைக்காத உணவு, காய்கறி, பழம், இறைச்சி, பூ ஆகிய கழிவுகள், தேயிலைத்துாள், காபித்துாள், முட்டை ஓடுகள் மற்றும் பிற எளிதில் மக்கும் கழிவுகள், ஈரக்கழிவு அல்லது மக்கும் கழிவாக வகைப்படுத்தப்பட்டு, அதனை பச்சை நிற டப்பா அல்லது பைகளில் போட்டு வழங்க வேண்டும்.
அதே போல், காகிதம், அட்டை, புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உலோகங்கள், கண்ணாடிகள், அட்டைப்பெட்டிகள், துணிவகைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் உலர் கழிவு அல்லது மக்காத கழிவாக வகைப்படுத்தப்பட்டு, நீலக்கலர் வண்ண டப்பா அல்லது பைகளில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், டாம்பன்கள் சிறுநீர்க் கசிவுத்தாள்கள் உள்ளிட்ட சுகாதாரக்கழிவுகள், சிவப்பு நிற டப்பாக்களில் சேகரித்து வைத்து வழங்க வேண்டும். இந்த மூன்று கழிவுகளையும், துாய்மைப்பணியாளர்கள் தினமும் வீடுகளுக்கு நேரடியாக வந்து வாங்கிக்கொள்வர்.
சிறப்புக் கவனிப்புக் கழிவு அல்லது வீட்டு அபாயகரக் கழிவுகளாக, வண்ணப்பூச்சு டப்பாக்கள், பீப்பாய்கள், பூச்சிக்கொல்லி டப்பாக்கள், மின் விளக்குகள், காலாவதியான மருந்துகள், கழிவு மின்கலங்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள் ஆகியவை கருப்பு நிற, டப்பாக்கள், கவர்களில் சேகரித்து வைக்க வேண்டும்.
இவற்றை, வாரத்திற்கு ஒரு முறை துாய்மைப்பணியாளர்கள் பெற்றுக்கொள்வர். இக் கழிவுகளை, நிர்ணயிக்கப்பட்ட வண்ணக்குறியீட்டுத் தொட்டிகளில் அல்லது பைகளில், அங்கீகரிக்கப்பட்ட வீடு வீடாகக் கழிவு சேகரிக்கும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
வகை பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும், சேகரிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் இதில், 20 ஆயிரம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டடம் அல்லது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் நுகர்வு கொண்ட நிறுவனம்,
நாள் ஒன்றுக்கு, 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவை உருவாக்கும் நிறுவனம், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மொத்தக் கழிவு உருவாக்குபவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள், தங்களது சொந்தச்செலவில், 4 வண்ணக் குறியீடுகள் கொண்ட குப்பைத்தொட்டிகளை வாங்க வேண்டும். மேலும், கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே, தனித்தனியாகப் பிரித்து, நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும்.
