/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைக்குழந்தையுடன் சிறைவாசம்; சுந்தராம்பாளுக்கு தேசமே சுவாசம்
/
கைக்குழந்தையுடன் சிறைவாசம்; சுந்தராம்பாளுக்கு தேசமே சுவாசம்
கைக்குழந்தையுடன் சிறைவாசம்; சுந்தராம்பாளுக்கு தேசமே சுவாசம்
கைக்குழந்தையுடன் சிறைவாசம்; சுந்தராம்பாளுக்கு தேசமே சுவாசம்
ADDED : ஆக 14, 2025 09:37 PM

வீட்டை விட்டு பெண்கள் வெளியே வராத, படிப்பறிவு இல்லாத அக்கால கட்டத்திலும் கூட, தனது, இளம் வயதில், விடுதலை வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர் திருப்பூரை சேர்ந்த தியாகி சுந்தராம்பாள். விடுதலை போரில் அவரது பங்களிப்பு குறித்து, 'சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி'யின் மாநில பொது செயலாளர் நடராஜன் நம்மிடம் பகிர்ந்தவை:
திருப்பூர் வீரபாண்டி, குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்துகவுண்டர்; வி.ஏ.ஓ., வாக இருந்தவர். இவரது மகள், சுந்தராம்பாள். 1913 அக்., 7ல் பிறந்த இவர், கடந்த, 2007ல், தனது, 95வது வயதில் மறைந்தார்.
காந்தியிடம் நகைகளை கழற்றிக்கொடுத்தார்
மகாத்மா காந்தி எங்கு சென்றாலும், ஹரிஜன சேவா நிதி திரட்டுவது வழக்கம். அவர் திருப்பூர் வந்த போதும், நிதி திரட்டினர். காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்ட சுந்தராம்பாள், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி, காந்தியிடம் கொடுத்துவிட்டார். அப்போது அவருக்கு வயது, 15. அவரது செயலில் நெகிழ்ந்த காந்தியடிகள், ''நாட்டில் சுதேசி எண்ணம் வளர வேண்டும்; கைத்தொழில்கள் செழிக்க வேண்டும்; நெசாவாளர்கள் வறுமையின்றி வாழ வேண்டும்; அதற்காக நீங்க கதராடை அணிய வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கதராடை அணியத் துவங்கினார், சுந்தாராம்பாள். அன்று முதல் காந்தியடிகள் அறிவிக்கும் தீண்டாமை ஓழிப்பு, மதுவிலக்கு, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
28.82 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்
கதர் மேல் கொண்ட பற்றால், தன் குடும்பத்துக்கு சொந்தமான, 22.82 ஏக்கர் நிலத்தை, கதர் உற்பத்தி, விற்பனை மற்றும் பயிற்சி மைய பயன்பாட்டுக்கு வழங்கினார். திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் ஸ்டாப்பில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்க அலுவலகத்தில் தான் காந்தி அஸ்தி வைக்கப்பட்டுள்ளது; இந்த இடமும், இவரால் வழங்கப்பட்டது தான்.
கடந்த, 1941ல் சத்யாகிரகத்தில் ஈடுபட்டு, தனது மூன்று மாத குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு, சென்னை சென்று போராடினார். கைது செய்யப்பட்ட அவர் கைக்குழந்தையுடன் மூன்று மாதம் சிறையில் இருந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, ஏழு மாத சிறை தண்டனை பெற்றார். அங்கேரிபாளையத்தில், 'காந்தி சுந்தராம்பாள் சேவா மந்திர்' என்ற ஆதரவற்றோர் காப்பகம் நிறுவி தனது கடைசி காலத்தை செலவழித்தார்.வினோபாஜி தென்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, வீரபாண்டி கதர் வஸ்திராலயத்தில் தங்கி சுந்தராம்பாள் தோட்டத்திற்கு சென்று பலமுறை உரையாடியுள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.