/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வசதிகள் மேம்பாடு
/
ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வசதிகள் மேம்பாடு
ADDED : மே 22, 2025 12:15 AM
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், புதிதாக உலர் களங்கள், கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், தேசிய வேளாண் சந்தை ( இ-நாம்) திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, விவசாய விளை பொருட்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, பூளவாடியில், ரூ.50 லட்சம் மதிப்பில், 250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், உடுமலை, மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகங்களில், விவசாயிகள் விளை பொருட்களை காய வைத்து விற்பனை செய்யும் வகையில், தலா, ரூ. 12.50 லட்சம் மதிப்பில் உலர் களங்கள் மற்றும் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், விளை பொருட்களை உலர வைக்கவும், இருப்பு வைத்து விலை வரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும், இருப்பு வைக்கும் பொருட்களுக்கு பொருளீட்டு கடனும் வழங்கப்படுகிறது.
அனைத்து விளைபொருட்களும், இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை மேற்கொள்ளும் வசதி உள்ளதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே, விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலுள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.