/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனாம் நில விவசாயிகளால் தாலுகா அலுவலகம் முற்றுகை
/
இனாம் நில விவசாயிகளால் தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : ஏப் 15, 2025 11:47 PM

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், அடுத்த, இச்சிப்பட்டி கிராமத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, விளை நிலத்துக்குள் நுழைந்ததுடன், அளவீடு பணி மேற்கொண்டதாக கூறி, விவசாயிகள் நேற்று, பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இனாம் வகைப்பாடு நிலத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்தி, முறையான கிரய ஆவணங்கள் வைத்தும் விவசாயம் செய்து வருகிறோம். இனாம் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த, 11ம் தேதி, எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல், தனியார் நிலத்துக்குள், வருவாய்த்துறை அதிகாரிகள் நுழைந்து போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர்.
யாரும் இல்லாத நேரத்தில், அரசுத்துறை அதிகாரிகள் இவ்வாறு நுழைவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்துவரும் சூழலில், நிலத்துக்குள் நுழைந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, இது குறித்து புகார் அளித்த விவசாயிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விசாரிப்பதாக அதிகாரிகள் கூறியதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

