/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமுறை மீறிய கட்டடங்கள் பல்லடத்தில் அதிகரிப்பு
/
விதிமுறை மீறிய கட்டடங்கள் பல்லடத்தில் அதிகரிப்பு
ADDED : மார் 27, 2025 12:27 AM
பல்லடம்; பல்லடம் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை, வரைமுறை இல்லாமல் அதிகரித்து வருகிறது.
வணிக ரீதியான கட்டடங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு என, கட்டட விதிமுறைகள் உள்ளன. கட்டடம் கட்டுவதற்கு முன் அனுமதி பெறுவதில் துவங்கி, கட்டடங்களை கட்டி முடிப்பது வரை, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.
பொதுவாக, 2 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமும், 2 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு டி.டி.சி.பி., அனுமதியும் பெற வேண்டும். ஆனால், நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில், எண்ணற்ற கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டப்படுகின்றன. குறிப்பாக, லட்சம் சதுர அடி இருந்தாலும், 2 ஆயிரம் சதுர அடிகளாக பிரித்து அனுமதி வழங்கப்படுகிறது.
பொதுவாக, விதிமுறைகளை பின்பற்றி உரிய அனுமதி பெற்று கட்டப்படும் கட்டடங்களில், ஜன்னல், தண்ணீர், காற்றோட்ட வசதி, அவசர வழி, பார்க்கிங், தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் என, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டப்படும் கட்டடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றால், உள்ளாட்சி நிர்வாகங்களுக்குவருவாய் இழப்பு ஏற்படுவது ஒருபுறம் இருக்க, ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், உயிர்சேதம், பொருட்சேதங்கள் தவிர்க்க இயலாதவையாக ஆகிவிடும்.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், சில அதிகாரிகள், கையூட்டு பெற்றுக் கொண்டும், தங்களுக்கு சாதகமானவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு, விதிமீறல் கட்ட டங்களுக்கு அனுமதி தருகின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில், இது போன்ற விதிமீறல் கட்டடங்கள் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.