/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பு : விலை சரிவால் ஏமாற்றம்
/
சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பு : விலை சரிவால் ஏமாற்றம்
சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பு : விலை சரிவால் ஏமாற்றம்
சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பு : விலை சரிவால் ஏமாற்றம்
ADDED : டிச 20, 2025 08:58 AM

உடுமலை: உடுமலை தினசரி சந்தைக்கு, சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால், விலை குறைந்து ஏலம் போனதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செலவு அதிகரிப்பு, அறுவடையின் போது விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால், இச்சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
தற்போது, இரு சீசன்களில், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். கடந்த சீசனில், அறுவடையின் போது விலை சரிவு ஏற்பட்டதால், விளைநிலங்களில் பட்டறை அமைத்து, சின்னவெங்காயத்தை இருப்பு வைத்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், பட்டறையை பிரித்து, சின்னவெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால், வழக்கத்தை விட சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று உடுமலை தினசரி சந்தையில், சின்னவெங்காயத்துக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 விலை கிடைத்தது. விலை வழக்கத்தை விட குறைந்திருந்தது.
விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடியில், இடுபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைப்பதில்லை. இருப்பு வைத்த சின்னவெங்காயம் விற்பனைக்கு வருவதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் வரத்து குறைந்து, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இச்சாகுபடி பரப்பு சரியாமல் இருக்க நடவு சீசனில், தோட்டக்கலைத்துறை வாயிலாக, சின்னவெங்காய நாற்றுகள் மானிய விலையில் வழங்க வேண்டும்.
இருப்பு வைப்பதற்கான பட்டறைகள் அமைக்கவும், மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்தால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

